Manu, my son

என் மகன் மனு
மனு
என் மூத்த பிள்ளை – அவன்
நெஞ்சில் கள்ளமில்லை 
 
நெஞ்சில் கள்ளமில்லை – அவன் 
எடுப்பார் கைப்பிள்ளை  
 
எடுப்பார் கைப்பிள்ளை  – அவன் 
அம்மாவின் செல்லப்பிள்ளை
 
அம்மாவின் செல்லப்பிள்ளை  – அவள் 
எள்என்றால் எண்ணையாக நின்ற பிள்ளை 
அம்மா தும்மினாலோ, இருமினலோ 
எழுந்துவந்து என்னவென்று கேட்கும் பிள்ளை
கட்டி வெல்லம் உடைக்கும் பிள்ளை 
கொட்டுபனி குளிரில்நின்று ஒதுக்கும் பிள்ளை 
அப்பனுக்கு உதவும் பிள்ளை – எங்கள் 
அனைவருக்கும் உடற்பயிற்சி கொடுக்கும் பிள்ளை 
சித்திரத்தில் சிறந்த பிள்ளை – புகைப்
படத்தில் தேர்ந்த பிள்ளை 
இன்று மின்னுவது பொன் – அவனுக்கு 

வெளுத்ததெல்லாம் பால்

அவன் எடுப்பார் கைப்பிள்ளை
அவன் உள்ளத்தில் கள்ளமில்லை

வெள்ளை உள்ளம் கொண்ட பிள்ளை 
அவன் எடுப்பார் கைப்பிள்ளை 
நல்லதைச் சொல்ல ஆளில்லை – அவனுக்கு
எடுத்துரைக்க யாருமில்லை 
பண்பு கெட்டவர் சிலர் எரியும் நெருப்பில்
எண்ணெய் ஊற்றுவதை 
அவன் உணரவில்லை 
அவன் எடுப்பார் கைப்பிள்ளை
அவன் உள்ளத்தில் கள்ளமில்லை
வீரத்தைக் கொடுத்த அனுமன் – என் மகனுக்கு 
விவேகத்தையும் கொடுக்கட்டும் 
எங்கிருந்தாலும் வாழட்டும் – என் மகன் 
மனு என்ற பேருக்கேற்ப நீதியுடன் நடக்கட்டும் 
அன்புடன் அப்பா 

Bharathanatyam

DSC04885DSC04886DSC04888DSC04889DSC04890DSC04894-aDSC04896ஒரு சாதாரண சனிக்கிழமை சுகம் நிறைந்த மாலையாக மாறிய கதை.

Can a Saturday be this good?

I came home last night and my wife said she would be going to a dance program, Bharatanatyam Arangetram.
I: Okay, Can I come come with you?
My wife: No, Stuti invited only me and my friend Amutha.
V
V
V
I contacted Stuti and requested for a ticket.
She kindly granted one…..

And guess what … This Saturday turned out to be “The Best Saturday” this year.

Note: Can you imagine, someone feeds you with pre-event snacks, Song, Music and Dance and then a sumptuous dinner….all free,,, Yes it is true

காந்தக் கண்ணன் “பீம் குட்டியை” வீட்டில் விட்டுவிட்டு
கட்டியவளுடன் கிளம்பிவிட்டேன்.

மாற்றான் தோட்டத்து மல்லிகை மலர்ந்து,
மணந்து, மகிழ்ச்சி ஊட்டிய மாலை.

ஸ்துதி முகர்ஜி – முன்பின் அறிமுகமில்லை.
இருந்தும் பார்க்கப்போன நான் ஏமாறவில்லை

மூன்று மணிநேரம் போனது தெரியவில்லை.
பாட்டும் தாளமும் பரதமும் திகட்டவேயில்லை.

ஆசிரியர்கள் குகேந்திரன் சரவணபவா
லுசாந்தினி குகேந்திரன்

நிகழ்ச்சியைத் தொய்வில்லாமல் நடத்திட
தொகுப்பாளர் ராஷ்மி

பாட்டுக்கு நம்ம சப்தவி
துணை இசைக்கு அனீஷ், சேயோன்

மேடையும், அரங்கமும் களை கட்டியது
ஒலியும் ஒளியும் மெருகூட்டியது

பிள்ளையாருக்கு ஒரு பாட்டு – அவன்கூட
பிறந்தவனுக்கு ஒரு பாட்டு

சிவனுக்கும் சக்திக்கும் ஒரு பாட்டு
கோவர்த்தன மலையை குடையாகப்
பிடித்த கிருஷ்ணனுக்கு ஒரு பாட்டு

அடவுகளும் அபிநயங்களும் அற்புதம்
ஆடைகளும் அணிகலன்களும் அதிபொருத்தம்

தோரணைகள் இறைவரைந்த சித்திரம்
தொகுத்தளித்த பாடல்கள்தான் மந்திரம்

ஸ்துதியின் ஒவ்வொரு அசைவிலும் கடின உழைப்பின் பலன் தெரிந்தது.
நட்பும், உறவும் அவருக்கு துணை நின்ற ஒற்றுமை புரிந்தது

மொத்தத்தில் அழகான ஒரு மாலையை எங்களுக்குத் தந்த
ஸ்துதிக்கு நன்றி

Thirumurai Thirumanam

இறைவன் சாதி, சமயம், மதம், மார்க்கம், மொழி, நாடு, இனம், நிறம், திறன் – அனைத்துக்கும் அப்பாற்பட்டவர், மேலானவர்.
முக்கயமாக மொழி – உள்ளன்போடு எந்த மொழியில் அழைத்தாலும் வருவார், வேண்டுவதைத் தருவார்.

மகனின் திருமணம் – தமிழுக்கு முதலிடம்
ஆனைமுகனை அழைத்தது தமிழில்
ஆறுமுகனை அழைத்தது தமிழில்
அப்பனை அழைத்ததும் தமிழில்
அம்மையை அடிபணிந்ததும் தமிழில்

வெள்ளைக்கமல வீணை நாயகியிடம்
நல்ல தமிழ் வேண்டியதும் தமிழில்

முன்னோர் வழிபாடு முதலில்
இயற்கை வணக்கம் தமிழில்
இறைவனை எழுந்தருள வேண்டியது தமிழில்
மணமக்கள் உறுதிமொழி தமிழில்

தூப, தீப, அமுது அளித்தது தமிழில்
திருப்பூட்டு மந்திரம் தமிழில்
வாழ்த்துப் பாடல் தமிழில்
கண்ணேறு கழித்தது தமிழில்

விருந்து சாப்பாடும் தமிழ்நாட்டு உணவு

Thirukkural
கோளறு பதிகமும், சகலகலாவல்லி மாலையும்
பதிவிசையாக பின்னணியில்

Kallikkaattu Ithikaasam

கள்ளிக்காட்டு இதிகாசம் 

வாழ்க்கையில் இடை இடையே போராட்டம் வரலாம், இயற்கை. ஆனால் போராட்டமே வாழ்க்கையாக அமைந்த ஒரு “பெருசோட” கதை இந்த இதிகாசம். பெரிய பஞ்சத்திலும் வறுமையிலும், இந்தியா உழன்று கொண்டிருந்த காலம். விடுதலை பெற்ற நேரம். படிப்பறிவில்லாத ஒரு குக்கிராமத்தின் கதை இந்த இதிகாசம். கள்ளியும், கற்றாழையும், நெருஞ்சி முற்களும், சுக்காங்கற்களும் கட்டமும் நட்டமும் மட்டுமே பார்த்த மக்களின் கதை.

வைகை அணை கட்டிய வரலாறு. நீர் பிடிப்புப் பகுதியில் மூழ்கிய 12 ஊர்களின் கதை. கையாலகாத மகன், கணவனை இழந்த ஒரு மகள், அவள் பெற்ற பேரன், கிழிந்த நாராய் நோயில் கிடக்கும் மனைவி, இளமையில் ஆசைப்பட்டு, அடையமுடியாத காதலி இப்ப வாழ்விழந்து வந்து சேர்ந்து வேலைக்காரி – இவர்களின் வாழ்க்கை கூறும் இந்த இதிகாசம். பலருக்கு உழைப்பு ஒன்றே மூலதனம். கூழும் கானப்பயிறு துவையலே உணவில் பிரதானம்.

30 பதிப்புகள் வெளிவந்த புத்தகம். காரணம்? ஒவ்வொரு பக்கத்திலும் வீசும் நம் மண்ணின் மணம். சாஹித்ய அகடெமி பரிசு வாங்கிய நூல். சொல்லில் சுகத்தையும் சோகத்தையும் சேர்த்துச் சொல்லும் காவியம். வானம் பார்த்த பூமியின் வாழ்வு பாடும் ஓவியம்.

எடுத்தால் கீழேவைக்க முடியாத புத்தகங்களில் இதுவும் ஒன்று. சொலவடை ஒவ்வொன்றும் மிக மிக நன்று. இதோ உங்களுக்காக சில >>>
“கோபத்தையும் கண்ணீரையும் முந்தானையில் செல்லத்தாயி எந்தப்பக்கம்தான் முடிந்திருப்பாளோ? அவள் கூப்பிட்ட குரலுக்கு நான் முந்தி நீ முந்தி என்று ஓடிவரும் இரண்டும்”

“புண்ணாக்கில் எண்ணெய் எடுப்பது மாதிரி இறுகிப்போன போன மனதில் இருந்து சொல் ஏதும் கசியவில்லை”

“சாக்குலே விழுந்த கண்ணீர்த்துளி சத்தமா போடப்போவுது?”

“கொடுக்காப்புளி வெத மாதிரி ரெண்டு கண்ணு, கன்னத்துலே இறங்கி காத்துலே ஆடி வா வான்னு கூப்புடுற முடி”

“அவுளுக்கு தெகிரியம் இல்லேயே தவிர தாகம் இல்லாமல் இல்லை”

“அழுக்குப் புடிச்ச ரூவாய்கள், அழுக்குப் புடிக்காத கனவுகள்”

“உச்சந்தலையில் வெண்ணை வச்சா, உள்ளங்கால்லெ பிசுபிசுக்கும் வெயிலு”

உங்களுக்கும் சேர்த்துத்தான் படிச்சேன் இந்த புத்தகத்த.

உங்களுக்கும் சேர்த்துத்தான் வடிச்சேன் என் கண்ணீர.

 

Alagar Kovil

அழகர் கோவில், மதுரை

நான் பட்ட கட்டம் என் பிள்ளைகள் படக்கூடாது என்று அவர்களை எங்கு அழைத்துப் போனாலும் வானூர்தி, மகிழுந்து, குளிர் வசதி தொடரி – இவைகளில்தான் பயணம். போனமுறை இந்தியா வந்தபோது இருவரும் போர்க்கொடி உயர்த்தினார்கள்.
“நாங்க பிறந்த மதுரை பற்றி எங்கள் பிள்ளைகளுக்குச் சொல்ல சொந்தமாக கதைகளே இல்லை, உங்கள் கார் எங்களுக்கு வேண்டாம், சைக்கிள், பஸ், நடந்து போற மாதிரி இடம் சொல்லுங்கள், நாங்கள் போகிறோம்” என்றார்கள்.
அழகர் கோவில் நினைவுக்கு வந்தது. சொன்னேன். அடுத்தநாள் அதிகாலை எழுந்து மாமனுடன் கிளம்பி, திருநகரில் இருந்து நடந்து திருப்பரங்குன்றம் சென்று, குடைவரைக் கோவிலில் குமரனை தரிசித்து, பின் பெருமாளைப் பார்க்க பேருந்தில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வழியே அழகர் கோவில் போய்ச் சேர்ந்தார்கள். அவர்களின் முக்கிய இலக்கு “மலை ஏறுவது”, சாமி கும்பிடுவது இல்லை. கோவிலுக்குப் போகாம திரும்பி வந்தா, நாங்க திட்டுவோமே என்பதற்காக போய் வருவார்கள்.

கள்ளழகரைப் பார்த்துவிட்டு 3 கி.மீ. நடந்தே மலைஏறி பழமுதிர்சோலை (சோலைமலை) சென்று மனைவியருடன் இருக்கும் முருகனை வணங்கி, மேலும் கொஞ்ச தூரம் மலை ஏறி ராக்காயி தீர்த்தத்தில் (நூபுர கங்கை) நீராடி மகிழ்ந்தனர். அந்த சில்லென்ற நீர்க்குளியல்தான் பயணத்தின் சிறந்த அம்சம் என்று சொன்னார்கள்.

மதியத்துக்கு மேலே நானும் எங்க மாமாவுடன் (சின்ன மாமனார்) கிளம்பி காரில் அங்கு போய் சேர்ந்தேன். எதுக்குப் போனேன் தெரியுமா? அழகர்கோவில் தோசை சாப்பிட. அதுதான் அந்தக் கோவிலின் பிரசித்தமான பிரசாதம், உணவு.

கெட்டியா அரைச்ச கருப்பு உளுந்து மாவு, ஊறவச்சு அரைச்ச சம்பா அரிசி மாவு, சுக்கு, பெருங்காயம், குறுமிளகு, உப்பு, கருவேப்பிலை, எல்லாத்தையும் ரொட்டி மாவு பதத்துலே கெட்டியா பெசஞ்சு, நெய்யிலே சுட்டு தருவாங்க பாருங்க, ஒண்ணு சாப்பிட்டாலே வயிறு திம்முன்னு இருக்கும்.

இருட்ட ஆரம்பித்து விட்டதால் எல்லோரையும் கார்லே அள்ளிப்போட்டு திருநகருக்குத் திரும்பினோம்.

மதுரையில் இருந்து 20 கி.மீ.தான் தூரம். மேலூர், மதுரையில் இருந்து பஸ்கள் உண்டு. மலைமேல் போவதற்கும் பஸ் வசதி இருக்கிறது. நடந்து போவதாக இருந்தால் மாலை 4 மணிக்கு இறங்க ஆரம்பித்து விடுங்கள்.

ஒரு வித்தியாசமான உணர்வுக்காக ஹோட்டல் ஜங்கில் ஸ்டே யில் தங்குங்கள். சமணமத குகைக்கோவில் பக்கத்தில்தான். திருப்பரங்குன்ற மலை மீதும் ஏறலாம்.

பக்கத்தில் மொட்டை அரசு கரட்டில் மயில்கள் பார்க்கலாம். அடிவாரத்தில் நான் படித்த தியாகராஜர் பொறியியல் கல்லூரி. (சுயச்சார்பு பல்கலைகழகம்). கொஞ்சம் தள்ளி மதுரை பன்னாட்டு விமான நிலையம். (ஒருவேளை நீங்கள் விமானத்தில் வருவதாக இருந்தால்).

அறுபடை வீடுகளில் இரண்டு வீடுகள் எங்கள் மதுரையில்.

தினமலர் வலைத்தளத்தில் மேலும் விபரங்கள் உள்ளன.
http://temple.dinamalar.com/New.php?id=461

சமணர் கல்வெட்டுகளையும் சிலைகளையும் பார்க்க இன்னொரு இடம் – கீழக்குயில்குடி – இந்த ஊரைப் பற்றி பிறகு பார்ப்போம்

alagarkovil 1alagarkovil 2alagarkovil 3alagarkovil 4alagarkovil 5alagarkovil 6 aanaimalaiDSC00560DSC00561DSC00562DSC01483

 

 

Why Ottawa?

ஆட்டவா


சரி, அப்படியே வரதா இருந்தா, எங்க ஊருக்கு எப்ப வரலாம்?

கடுங்குளிர், கொட்டுபனி, பனிப்புயல், பனிச்சறுக்கு விளையாட்டு, ஐஸ் ஸ்கேடிங், உங்கள யாரும் பாக்கக் கூடாது, நீங்க யாரையும் பாக்கக் கூடாதுன்னா (கால் முதல் தலை வரை நான்கு, ஐந்து உடுப்பு போடவேண்டியிருக்கும்) – சனவரி, பிப்ரவரி, மார்ச்
 
உருகு பனி ஓடி, ஓயாத மழைநீரும் கலந்து, ஓடை, சிற்றாறு, ஆறில் விழுந்து பெருநதியாக மாறி, 1200 கி.மீ. ஓடி அட்லாண்டிக் கடலில் கலக்கும் கட்சிகள், மொத்த நாடும் இலையும், தளிரும், மொட்டும் பூவுமாக பட்டென்று பச்சையாகும் மாயம் – இதெல்லாம் பார்க்கணுமா – ஏப்ரல், மே, ஜூன்
 
வெப்பநிலை 20 – 30 degree C தான் இருக்கனும், சேலை, சுடி, லெஹங்கா, மினி, மிடி, வேட்டி, சட்டை, ஜிப்பா தான் போடுவேன், ரெண்டு நேரம் வாக்கிங் போகணும், ஓடனும், மலை ஏறனும், நீந்தனும் – அப்ப ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் லெ வாங்க
 
இலைகள் பச்சை, மஞ்சள், பழுப்பு, சிகப்பு, தங்க நிறங்களில் மாறி, மின்னும் இலையுதிர் காலம் வேண்டுமா – அக்டோபர், நவம்பர், டிசம்பர்
 
அப்ப சரி, ப்ளைட் டிக்கெட் எவ்வளவு?
ஜூலை, ஆகஸ்ட், டிசம்பர் – ரிடர்ன் டிக்கெட் ஒரு இலட்சம் ஆகும், மற்ற மதங்களில் குறையும்.
 
சாப்பாடு, தங்குறது?
தரமான விடுதிகள் – Rs 5000 – 6000 ஒரு இரவுக்கு
Home Stay, AirBNB – Rs 2000 – 3000
சாப்பாட்டுக்கு என்ன ஒரு நாளைக்கு, ஒருவருக்கு அதிகப்பட்சம் 2500 (பீர், வய்ன், விஸ்கி சேர்க்காமல்)
 
எல்லாம் சரி, அப்படி எங்க ஊர்லே என்னதான் இருக்கு பாக்கறதுக்கு?
 
இதோ லிஸ்ட்.
1.
2. பாராளுமன்ற வளாகம்
3. ஆட்டவா ஆறு, கரை, குறுக்கே போகும் ஐந்து பாலங்கள்
4. அருமையான அருங்காட்சியகங்கள்
5. ரிடோ ஆறு, ரிடோ கால்வாய்
6. Hogs Back நீர்வீழ்ச்சி
7. Gatineau Hills
8. Beaver Tail Pastry (நாம் இனிப்பு பூரி மாதிரி)
9. Poutine (French fries மேல சீஸ், கிரேவி)
10. Maple Syrup (ரப்பர் மரத்துலே ரப்பர் பால் வடியுற மாதிரி, மேப்பிள் மரத்துலே ஆண்டுக்கு ரெண்டு வாரம் மட்டும் வெட்டி விட்டால் வடியும் தித்திக்கும் தேன்.
 
எழுதியது உங்கள் மனங்களை இன்னும் கவரவில்லை எனில், இதோ சில படங்கள் >>>

Beaver Tail Pastry - Copy - Copybheem kutti 1 - Copy - CopyChateau Laurier Hotel - Copy - CopyChateau Laurier Hotel 1 - Copy - CopyDinner - Copy - CopyDinner 2 - Copy - CopyDow's Lake 1 - Copy - CopyGirls with Bheem - Copy - CopyJK CM 1 - Copy - CopyJK CM 1 - Copy (2)Lux Oriente Est - Copy - CopyOttawa 01 - Copy - CopyOttawa 02 - Copy - CopyOur Motto - Copy - CopyParliament Entrance - Copy - CopyParliament grounds 2 - Copy - CopyParliament grounds 2 - CopyParliament grounds 2Parliament groundsParliament libraryParliament SenateRideau Falls - JKRideau Falls 1

Ottawa

ஆட்டவா (Ottawa) – கனடாவின் தலைநகர்

1812 – அமெரிக்காவுக்கும் பிரிட்டனின் காலனிகளில் ஒன்றான பிரிட்டிஷ் நார்த் அமெரிக்காவுக்கும் (தற்போது கனடா) போர். சில முனைகளில் இவர்களுக்கும் சிலமுனைகளில் அவர்களுக்கும் வெற்றி. அமெரிக்கா விடுதலை பெற்ற 36 வயது இளம் நாடு. வேகம் இருக்கத்தானே செய்யும்.

பிரிடிஷ் அரசு டல்ஹொவ்சி பிரபுவையும் லெப்டினென்ட் கர்னல் ஜான் பையையும் அமெரிக்க எல்லையில் இருந்து தூரத்தில் பாதுகாப்பாக ஒரு தலைநகரை உருவாக்க கட்டளை இட்டது.

படைகள் படகுகளில் வர எதுவாக கர்னல் பை ரிடோ ஆற்றை ஆளப் படுத்தி, அகலப் படுத்தி, படகுகளை உயர்த்தி தாழ்த்தும் “லாக்” அமைப்புகளை உருவாக்கி, 8 கி.மீ. நீளத்துக்கு ஒரு கால்வாய் வெட்டி, ByeTown என்ற ஊரையும் உருவாக்கினர்.

இங்கிலாந்தின் அரசி ஆட்டவா (பழங்குடி மொழியில் இருந்து மருவிய சொல்) என்று பேர் மாற்றினார். பிரிட்டிஷ் நார்த் அமெரிக்காவின் தலைநகரமாக அறிவித்தார்.

அதுவரை மரவணிக சந்தையாக இருந்த ஆட்டவா, கனடா என்ற நாடு 1867லில் உருவானபோது தலைநகராகி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இன்று அழகான, அமைதியான ஒன்பது லச்சம் பேர் வாழும் பெருநகராகி உலக அரங்கில் மதிப்பும் மரியாதையும் பெற்று விளங்குகிறது.

“The Universe Needs More Canada”

1999 சனவரி 24ந்தேதி பெரும் பனிப்புயல் வீசும் இரவில் வாடகைக்கு எடுத்த காரில் எடிசன், நியூஜெர்சியிலிருந்து ஆட்டவா வந்து சேர்ந்தேன் – என் முதல் ஒப்பந்த வேலைக்காக. இரண்டு வாரத்தில் வாங்கும், உற்பத்தி செய்யும் பொருட்களின் தரக்கட்டுப்பாடு முறைகளை கணினிமயமாக்கவேண்டும். செய்தேன், ஒப்பந்தம் நீடிக்கப்பட்டது. மறுபடியும் அமெரிக்கா சென்று மனைவி குழந்தைகளை அழைத்து வந்து குடியேறினோம். இதோ அடுத்த மாதம் 20 ஆண்டுகள் நிறைவு.

கனடா இன்னும் குடியரசு ஆகவில்லை. ஒப்புக்கு, பேருக்கு பிரிட்டிஷ் அரசிதான் எங்கள் நாட்டுக்கு தலைவி. அதிகாரம் எதுவும் இல்லை. பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ.

இதோ முதல் காணொளி >>>

எங்கள் பாராளுமன்றம்
எங்கள் கொடி
எங்கள் மக்கள்
எங்கள் அணிவகுப்பு

கண்டு களிக்க நீங்க எப்ப வருவீங்க?

அக்கா எங்க ஊருக்கு வந்தபோது எடுத்தது…

இனியும் வரும் …

https://www.youtube.com/watch?v=WVeE980zhOs&t=4s

 

Parliament grounds

Washington D.C.

வாஷிங்டன் டி.சி.
ஆண்களுக்கு மட்டும் சொட்டை, வழுக்கை ஏன் விழுகிறது என்று யோசித்துக்கொண்டே மேலே பயணிப்போம்…
 
பெரிய அக்காவின் மீது எனக்கு எப்பவுமே தனி பாசம், அவர்களுக்கு என் மீதும்,,,
 
எந்த அளவுக்கு என்றால், அப்பா இறந்தபோது நான் இங்கே அமெரிக்காவில். கையில் காசில்லை, கடன் கேட்க துணிவில்லை, அக்காவை கொள்ளி வைக்கச் சொன்னேன், ஊரை எதிர்த்து, உறவை எதிர்த்து. தம்பிக்காக செய்தார்கள். ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்பதை என்றும் நான் ஏற்றதில்லை. இருவருக்குமே அவர் அப்பா. ஈமச்சடங்கு யார் செய்தால் என்ன?
 
தம்பியை பார்க்க கனடா வந்தார்கள். ஆட்டவா, மாண்ட்ரியல், டொரோண்டோ, நயாகரா எல்லாம் பார்த்துவிட்டு அடுத்து எங்கே என்று யோசித்தோம். கனடாவின் தலைநகர் ஆட்டவாவில் இருந்து அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டி.சி. போலாம் என்று ஒரு மனதாக முடிவு செய்தோம். லதாவின் சித்தி மகன் குமார் விர்ஜீனியாவில் இருந்தார். “கம்புக்கு களை எடுத்த மாதிரியும் ஆச்சு, கொழுந்தனுக்கு பொண்ணு பாத்த மாதிரியும் ஆச்சு”
 
வீட்டுக்காரம்மா விருச்சிக ராசி, அக்கா சிம்ம ராசி, ஓய்வுபெற்ற தாசில்தார் வேற. ரெண்டு பேரையும் ஒரு கோட்டில் கொண்டு வரவே எனக்கு இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன. தலைலே பாதி முடி கொட்டிவிட்டது இருவரும் மாறி மாறி இழுத்து…(இப்ப முதல் வரியை மறுபடியும் படித்துவிட்டு வாங்க)
 
அந்த இரண்டு புலிகளின் நடுவில் இந்த வெள்ளாடு, ரதம் போல ஒரு கார் (Mercedes Benz GL), சாரதிகள் என் இரு மகன்கள் மனுநீதிச்சோழனும், சிபிச்சக்கரவர்த்தியும். பத்து மணி நேரப் பயணம். இடையில் என்டிகாட்டில் நிறுத்தி ஐ.பி.எம். தொடங்கிய கட்டிடம் காண்பித்தேன். Think, Think என்று செங்கல்களைக் கொண்டே  எழுதியிருப்பார்கள்.
 
முடிந்தவரை உறவினர் அல்லது நண்பர்கள் வீட்டில் தான் தங்குவோம். வேறு வழியில்லை எனில் மட்டுமே விடுதிகள். லதாவின் சித்தி மகன் குமார் ஹெர்ன்டனில் இருந்தார். அங்கு தங்கிக் கொண்டோம். குமார் அம்மா, என் சின்ன மாமியாரும் அங்கு இருந்தார், ஒரே கேலி, கிண்டல், கும்மாளம், விதவிதமா சாப்பாடு.
வாஷிங்டனிலும் சரி, நியூயார்க்கிலும் சரி கார் நிறுத்தும் கட்டணம் மிக மிக அதிகம். “சுருமாடு காப்பணம், சுமைகூலி முக்காப்பணம்”. எனவே மின்தொடரியில் போனோம் (அதாங்க மெட்ரோ ரயில்). I am watching you, America என்று சொல்வது போல கூர்மையான பார்வையுடன் அமர்ந்திருக்கும் ஆபிரகாம் லிங்கன் சிலையில் ஆரம்பித்து, 550 அடி உயர Washington Monument, Capitol Building, வெளியில் இருந்து வெள்ளை மாளிகை, சில அருங்காட்சியகங்கள்.

மலைஏறினாலும் முத்துக்குளிக்க முங்கினாலும் மச்சினன் துணை தேவைதான்.   இரவு வீடு திரும்பியபோது சுவையான உணவு காத்திருந்தது.

மிளகு மணக்கும் வெண்பொங்கல்
மிருதுவான உளுந்துவடை
நெய் மிதக்கும் சக்கரைப்பொங்கல்
சுடச்சுட இட்லி, சுவைமிகு சாம்பார், சட்னி
மனமும், வயிறும் நிறைந்த
மறக்க முடியாத நிகழச்சிகளில்
மற்றுமொன்று – மதுரைக்காரர்களுக்கு விருந்தோம்பல் பற்றி சொல்லியா தர வேண்டும் ?
அடுத்தநாள் முழுவதும் விருந்து, விருந்து, விருந்து, பிறகு புறப்பட்டு ஆட்டவா திரும்பினோம்
2000 கி.மீ., 5 மாநிலங்கள், 5 பேர், ஒரு கார், பல கதைகள், சில சண்டைகள் – கூட்டி கழிச்சுப் பாத்தா, மிஞ்சுவது இனிய நினைவுகள்தான்.
மீண்டும் பயணிப்போம். அதுவரை அன்புடன் முருகானந்தன்

First trip to USA

தொடங்குமுன் முடிந்த பயணம்
1997 அக்டோபர்
 
கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில்தான் உலகின் மிக நீளமான, படைகளால் பாதுகாக்கப்படாத எல்லை இருக்கிறது, ஏறக்குறைய 8900 கி.மீ. வேலி இல்லை, சுவர் இல்லை, ராணுவம் இல்லை, ஆனால் சட்டப்படி எங்கெல்லாம் எல்லை காவல் நிலையங்கள் இருக்கிறதோ அங்குதான் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்குள் போக வேண்டும். It is a “honour” based system.
 
ஐ.நா. தொடர்ந்து உலகின் மிக நல்ல நாடு என்று மூன்று முறை கனடாவை தேர்ந்தெடுத்த காரணத்தால் நான் குடும்பத்துடன் புலம் பெயர்ந்தேன். நாங்கள் நால்வரும் 18 ஆண்டு பொறியியல் அனுபவம், 6 மாதங்களுக்கு தேவையான பணம், 8 பெட்டிகளுடன் வந்து இறங்கினோம். குஜராத்தி முஸ்லிம் நண்பர் எங்களுக்கு ஒருவாரம் அடைக்கலம் தந்தார். 
வேலை இல்லாத காரணத்தால் யாரும் வீடு தரவில்லை. உடனே அமெரிக்காவில் இருந்த மச்சினர் வந்து லதா, மனு, சிபி மூவரையும் அழைத்துக்கொண்டு நியூஜெர்சி போய்விட்டார்.
முஸ்லிம் நண்பர் ஒரு ஆண் தனியாக அவர் வீட்டில் இருப்பது அவ்வளவு சரியில்லை என்பதால் என்னைக் கொண்டுபோய் ஒரு விலை குறைவான மோட்டலில் (Motel) இறக்கிவிட்டுப் போய்விட்டார், எட்டு பெரிய பெரிய பெட்டிகளுடன்.
தீபாவளி நெருங்கி விட்டது. மச்சினர் பஸ்ஸில் அமெரிக்கா வருமாறு அழைத்தார். One way ticket எடுத்து வாங்க, திரும்பி போகும்போது நால்வரையும் காரில் விடுகிறேன் என்றார்.
விடிகாலை டொராண்டாவில் இருந்து பஸ்ஸில் கிளம்பினேன். ஒன்றரை மணி நேரத்தில் அமெரிக்க எல்லை வந்து சேர்ந்தோம். பஸ்ஸில் இருந்த எல்லோரையும் இறக்கி Customs and Immigration அதிகாரியிடம் அனுப்பினார்கள்.
என் முறை வந்தது, இதுதான் நடந்தது.
அதிகாரி: எங்கிருந்து வருகிறாய்
நான்: டொரோண்டோ
அதிகாரி: எங்கிருந்து வருகிறாய்
நான்: டொரோண்டோ
அதிகாரி: எங்கு வசிக்கிறாய்
நான்: மோட்டலில் (அதோடு நிறுத்தி இருக்க வேண்டும், உண்மை விளம்பியான நான் யாரும் வீடு கொடுக்கவில்லை, அதனாலே மோட்டலில் இருக்கிறேன் என்ற கூடுதல் விபரம் கொடுத்தேன்)
அதிகாரி: எங்கே வேலை செய்கிறாய்?
நான்: வேலை இன்னும் கிடைக்கவில்லை, சும்மாதான் இருக்கிறேன்.
அதிகாரி: எந்த நாட்டின் கடவுச் சீட்டு
நான்: இந்தியா
அதிகாரி: எங்கு போகிறாய்
நான்: எடிசன், நியூஜெர்சி
அதிகாரி: எதற்கு போகிறாய்
நான்: தீபாவளி
அதிகாரி: அப்படின்னா?
நான்: விளக்குத் திருவிழா (அத்துடன் நிறுத்தியிருக்க வேண்டும், என் குடும்பம் ஏற்கனவே அங்கே போய்விட்டது என்ற கூடுதல் விபரம் கொடுத்தேன்)
அதிகாரி: பஸ் டிக்கெட் காண்பி
நான்: ஒரு வழி சீட்டை காண்பித்தேன்
அதிகாரி: உனக்கு இருக்க இடமில்லை, வேலை இல்லை, அமெரிக்காவுக்குள் வர விசா இல்லை, கையில் இருப்பதோ ஒரு வழி பஸ் டிக்கெட். நீ திரும்பி கனடாவுக்கு வருவாய் என்று நிரூபிக்க ஒரு சான்றும் இல்லை. எனவே உனக்கு எங்கள் நாட்டுக்கு வர அனுமதி இல்லை என்று சொல்லி திருப்பி அனுப்பி விட்டார். நல்ல வேலை அந்த மறுப்பை பாஸ்போர்டிலோ, கணினியிலோ பதியவில்லை.
நான்: 😦 விதியை நொந்தவாறு வெளியே வந்தேன்.
நான் சொல்லியதெல்லாம் உண்மை. ஆனால் உண்மை சிலநேரங்களில் செல்லுபடியாவதில்லை.
அமெரிக்கர்களின் அணுகுமுறை உங்கள் அனைவருக்கும் தெரியும்தானே. ஆணவம், அகங்காரம், அதிகாரம், கர்வம். இருந்தும் அமெரிக்க தூதரக வாசலில் வரிசையின் நீளத்தைப் பாருங்கள். காரணம் – செய்யும் வேலைக்கு அதிக கூலி, உடனே கூலி, தினசரி வாழ்க்கையில் யாரும் யாருக்கும் லஞ்சம் தர வேண்டியதில்லை.
நாம் மட்டும் குறைந்தவர்களா, என்ன, வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற சொலவடையே நாம் தந்ததுதானே.
1997 தீபாவளி – மனைவியும் குழந்தைகளும் அமெரிக்காவில். நான் கனடாவில்.
Lesson Learned – Common law states everybody is innocent unless otherwise proven guilty. But when it comes to immigration law, everybody is a suspect unless otherwise we prove ourselves to be innocent.
கையில் காசில்லை. கடுங்குளிர். எல்லையில் இருக்கும் ஒரு கடைக்காரன் காப்பி வாங்கிக் கொடுத்து, திரும்பி டொரோண்டோ போக டிக்கெட் எடுத்து என்னை அனுப்பிவைத்தான்.
பின்குறிப்பு: அதே அமெரிக்கா இரு மடங்கு சம்பளம் கொடுத்து எனக்கு வேலை கொடுத்தது நான்கே ஆண்டுகளில் – Stay Tuned.

Niagara Falls

நயாகரா நீர்வீழ்ச்சி

நீர்இன்று அமையாது உலகு – வள்ளுவர் சொல். அவர் எதைச் சொல்லாமல் விட்டார்?

தமிழ்நாடு மேற்குத்தொடர்ச்சி மலை மறைத்துக்கொண்டு இருக்கும் மழைமறைவுப் பகுதி, கொட்டும் மழையெல்லாம் கேரளா பக்கம். அதுவும் எங்க ஊரில் எப்பவும் தண்ணீர் பற்றாக்குறை. “திண்டுக்கல்காரனுக்கு பொண்ணு கொடுக்காதே, ரெட்டைக்குடம் போட்டு தண்ணி எடுத்தே இடுப்பு ஓடியும்”ன்னு பேச்சு வழக்கு உண்டு.

விதி என்னை சேர்த்த இடம் – கனடா. எங்கு பார்த்தாலும் தண்ணீர் –  குட்டை, குளம், ஏரி, ஓடை, கால்வாய், வாய்க்கால், அருவி, ஆறு, நதி, நீர்வீழ்ச்சி, கடல், பெருங்கடல் – அவ்வளவு தண்ணீர்.

ஐம்பெரும் ஏரிகள் (Great Lakes) மட்டும் உலகின் மொத்த நல்லதண்ணீரின் 20% தன்னகத்தே கொண்டு ததும்பி வழிந்து கொண்டே இருக்கின்றன. நான்கு ஏரிகள் (SuperiorHuronErie, Ontario) கனடா அமெரிக்கா இரண்டு நாடுகளுக்கும் சொந்தம். Lake Michigan அமெரிக்காவுக்கு மட்டும் சொந்தம்.

இந்த ஐந்து ஏரிகளின் பரப்பளவு நம் தமிழ்நாட்டைபோல ஏறக்குறைய இருமடங்கு, கொள்ளளவோ நம் செம்பரம்பாக்கம் ஏரியைப் போல 2 இலட்சம் மடங்கு. எந்த ஏரியிலும் நீங்க அடுத்த கரையைப் பார்க்க முடியாது. கடலைப் போலவே, அலைகள், சுழல்கள், ஆபத்தான ஆழ்நீரோட்டங்கள், உயிரினங்கள் எல்லாம் உண்டு. பெரும்படகு, கப்பல்கள் கவிழ்ந்து சமாதியும் அடைந்திருக்கின்றன.

ஐந்து ஏரிகளும் ஒன்றோடொன்று இணைந்தவை. வசந்தத்தில் உருகுபனியும், மற்ற காலங்களில் மழையும் ஏரிகளை நிரப்புகின்றன. ஒரு ஏரி நிறைந்து, வழிந்தோடி இன்னொன்றை நிரப்பும். நான்காவது ஏரியான “ஏரி”யையும் (ஏரியின் பெயரே ஏரிதான்” ஐந்தாவது ஏரியான “ஒன்ட்டாரியோ”வையும் இணைக்கும் நீர்வழித்தடத்துக்கு (ஆறு) பெயர்தான் நயாகரா. (இராகுவா பழங்குடிச் சொல்).

நயாகரா நதி முப்பது கிலோமீட்டர் வடக்கு நோக்கி ஓடி, மூன்று பிரிவாக பிரிந்து அமெரிக்கா பக்கம் இரண்டு சிறு நீர்வீழ்ச்சிகளாகவும், கனடா பக்கம் ஒரு மாபெரும் நீர்வீழ்ச்சியாகவும் பெருஞ்சத்தத்தோடு நொடிக்கு முப்பது அடி வேகத்தில், 3200 டன் நீரை கொட்டுகிறது. அதிக உயரமில்லை, 200 அடிக்கும் குறைவுதான். ஆனால் அந்த ஆர்ப்பரிக்கும் அழகைப் பார்க்க ஆண்டு முழுதும் பயணிகள் உலகெங்கிலும் இருந்து வந்து கொண்டே இருக்கிறார்கள்.

நாள் முழுதும் நடந்து கொண்டே பார்க்கலாம், நின்று நின்று ரசிக்கலாம், பெரும்படகுகளில் மிக மிக அருகே சென்று பஞ்ச பூதத்தில் ஒரு பூதம் இன்னொரு பூதத்துடன் இணைவதை தரிசிக்கலாம்,  ஹெலிகாப்டரில் பறந்து பார்க்கலாம்.

இந்தப் பேரழகியின் வயது – 14,000 என்று புவியியல் அறிஞர்கள் சொல்கிறார்கள்.  ஆனால் வனப்பும் யவ்வனமும், களையும், கம்பீரமும் கொஞ்சம் கூட குறையவில்லை. புதுமண தம்பதிகளின் தேன்நிலவுக்கு முதல் இடத்தில இன்று வரை இருப்பதில் விந்தைஇல்லை. நம் தமிழ்நாட்டின் மறைந்த மூத்த தலைவரின் பேத்தியும் தன் கணவனுடன் இங்குதான் வந்தார். (தாத்தா, பேத்தி இருவரின் பெயர் சொன்னால் என்னிடம் இருக்கும் செல்லாத நோட்டுகளில் ஒன்று பரிசாகத் தரப்படும்).

விமான நிலையங்கள் – டொரோண்டோ (கனடா), பப்பாலோ (அமெரிக்கா).

தங்கும் இடங்கள் – ஏராளம். ஒரு இரவுக்கு ரூ 4000 முதல் ரூ 20,000 வரை.

உணவுச் செலவு – ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு சராசரி ரூ 2500

நான் எங்கு இருக்கிறேன் – ஆட்டோவில் இருந்து நயாகரா 7 மணி நேர கார் பயணம்.

7 மணி தூரமா? பின் எங்க வீட்டுக்கு நீங்க ஏன் வரவேண்டும்? குறை மாவு நிறை கொழுப்பு உணவு நானே சமைத்து உங்களுக்கு கதையோடு பரிமாறுவேன். இட்லி, தோசை, பொங்கல், பூரி, வடை, உப்புமா, வத்தல், வடகம், அப்பளம், ஊறுகாய், சோறு, குழம்பு, ரசம், காய்கறி – என் வீட்டுக்காரம்மாவை அடிக்க ஆளில்லை, அட்லாண்டிக் கடலுக்கு மேற்கே.

இரண்டு நாடுகளுக்கும் விசா எடுத்து விடுங்கள். வானவில் பாதசாரி பாலம் வழியே நடந்தே இரண்டு நாடுகளுக்கும் போகலாம்.

முக்கியமான விடயம் – இந்த அக்டோபரில் இருந்து கனடாவில் கஞ்சா அடிப்பது குற்றமில்லை. 🙂 அரசே நாடு முழுக்க விற்பனை செய்கிறார்கள்.

இன்னொரு விஷயம் மறந்து விட்டேன், இந்த நீர்வீழ்ச்சியில் இருந்து 4 மில்லியன் KW மின்சக்தியும் உற்பத்தி செய்கிறோம்.

niagara-2017-2niagara-2017