Ramanikaran

My maternal uncle Ramanikaran passed away this September. தாய்மாமனுக்கும் ஒரு கடிதம்

Ottawa, Canada

18 September, 2010

 

மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் போகும் மாமா ரமணிகரன் அவர்களுக்கு நான் எழுதும் இரங்கல் கடிதம்.

உங்களைப்பற்றிய சில நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதே நான் உங்களுக்கு செய்யும் இறுதி மரியாதையாகும்.

 

அப்பா, அய்யா , ஐயப்ப மாமா இவர்களுக்கு அடுத்து நீங்கள்தானே எனக்கும் நம் குடும்பத்தாருக்கும் ஒரு தூணாக , துணையாக , வழிகாட்டியாக இருந்தீர்கள்.

ஏழைக்குடும்பத்தில் பிறந்தாலும் உங்கள் எண்ணங்களும் செயல்களும் ஏழ்மையை பிரதிபலித்தது கிடையாது.

ஊர்க்குருவியாக இருக்க நீங்கள் விரும்பியதே இல்லை. உயரப் பறக்கும் பருந்தாவதே உங்களின் லட்சியம்.

அமைதி உங்களுக்குப் பிடிக்கும் அளவுக்கதிகமான சத்தம் பிடிக்காது, அநாகரிகமான சம்பிரதாயங்கள் பிடிக்காது.

 

தந்தையோடு கல்வி போம் – உங்கள் விஷயத்தில் உண்மையானது .

உயர் கல்விக்கு வாய்ப்பில்லை, உறவினருக்கு பாரமாக விருப்பமில்லை.

எனவே இந்திய ராணுவத்தில் உங்களை இணைத்துக்கொண்டீர்கள்.

ராணுவம் உங்கள் உடலையும் உள்ளத்தையும் ஒரு சேர உறுதிப்படுத்தியது.

ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று மொழிகளில் தேர்ச்சி பெற்றீர்கள்.

முத்தமிழில் மூன்றாம் தமிழாம் நாடகக்கலையில் தீராத தாகம் கொண்டீர்கள்.

ஊருக்கு வரும் போதெல்லாம் உதயனையும் முருகனையும் கூட்டிகொண்டு உலா வருவீர்கள்.

அய்யா என் பெயரை ஆங்கிலத்தில் எழுத கற்றுக்கொடுத்தார் , நீங்கள் ஹிந்தியில் எழுத சொல்லிக்  கொடுத்தீர்கள்.

உரிய நேரத்தில் உடன் பிறந்தவளின் மகளை மணந்து உறவை வலுப்படுத்தினீர்கள்.

 

அப்பாவுக்கு வாணி விலாஸ் காபி, உங்களுக்கு ஆரியபவான் காபி.

வாங்கிவரும் எங்களுக்கு அதில் கிடைக்கும் பாதி.

நம் பட்டாசாலைதான் உங்களின் நாடக மேடை. அடுப்புக்கரியை பூசிக்கொண்டு ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோவை

அறிமுகப்படுத்தினீர்கள் – மறக்கவும் மன்னிக்கவும் சொற்றொடர்

பிரயோகத்தை உங்களிடம்தான் முதலில் கேட்டேன்.

முப்படையில் சேருவதற்கு முதற்படியாக எங்களை NCC-ல் சேர வைத்தீர்கள். புகைப்படக் கலையில் ஆர்வம் வர எனக்கு கேமரா வாங்கி கொடுத்தீர்கள்.

 

மெட்ராஸ் சிங்காரச்சென்னை ஆவதற்கு 30 வருடங்களுக்கு முன்பே

எங்களுக்கு,  கடற்கரை, கந்தக்கோட்டம், கார்பொரேசன் நீச்சல்குளம்,

ஆலந்தூர், பரங்கிமலை, மைலாப்பூர், மவுண்ட்ரோடு,

கோட்டை, கொத்தவால் சாவடி, கோடம்பாக்கம் விஜயா வாகினி

இன்னும் பல இடங்கள் கூட்டிச்சென்று காண்பித்தீர்கள்

 

எனக்கும் உதயனுக்கும் சபாரி சூட் வாங்கித்தந்து செலவை சரிக்கட்ட

சேலை பில்லை சரி செய்து ஜமுனாவிடம் சிக்கிக்கொண்டீர்கள்.

 

ஆண் ஒன்று பெண் ஒன்று அளவாகப் பெற்றீர்கள்

பூபேந்திரா, பூமா எனப் பெயரிட்டு மகிழ்ந்தீர்கள்

மதுரையில் நான் மனம் கலங்கி மதிச்சயம் தான் வந்தபோது

எது உண்மை என்றெனக்கு எடுத்துரைத்து தேற்றினீர்கள்.

 

நான் பொறியியல் முடித்தவுடன் மாநிலத் தலைநகரில்

நேர்முகத் தேர்வுக்கு கூடவே வந்திருந்து பணி கிடைத்த

செய்தி கேட்டு பாராட்டி பரிசளித்து பட்டினப்பாக்கத்தில்

பாதுகாப்பாய் விட்டு விட்டு திண்டுக்கல் திரும்பினீர்கள்

 

எனக்கு மட்டுமா நம் வீட்டில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில்

ஒவ்வொரு காலகட்டத்தில் முடிந்தால் பணஉதவி இல்லையேல்

உடல் உழைப்பு மறுக்காமல் செய்தீர்கள். அனைத்துக்கும் மேலாக

ஈடில்லா பாசத்தை சம்யுக்தா என்ற யாழினிக்குத் தந்தீர்கள்.

 

உங்களுக்குத் திறமைகள் பலஇருந்தும் ஒரு திருப்புமுனை கிடைக்கவில்லை. நீங்கள் கலைகள் பல கற்றும் வெற்றிக் களம்ஒன்று அமையவில்லை. உயிருக்குப் போராடும் வேளையில் கூட நீங்கள் ஓடி ஓடி சேவை செய்த அந்த தெய்வம் வந்து உதவவில்லை.

 

உங்கள் வாழ்க்கைப் போராட்டத்தைப் பார்த்துக் கற்றதை விட

உங்களின் மரணப் போராட்டத்தைக் கேட்டு நான் உணர்ந்த

உண்மையின் வலி அதிகம் – அந்த உண்மை

பாத்திரமறிந்து பிச்சை போடு தெய்வம் அறிந்து கோவில் கட்டு

 

கடந்த காலம் திரும்ப வராது, அதனால் நீங்கள் விட்டுச் சென்ற குடும்பத்துக்கு சீரான நிகழ்காலமும் சிறப்பான எதிர்காலமும் அமைய எல்லாம் வல்ல இறைவனை இருகரம் கூப்பி வணங்குகிறேன். அவர்களின் நல்வாழ்வில்தான் உங்கள் ஆத்மா சாந்தி அடையும் என்று திடமாக நம்புகின்றேன்.

 

என்றும் உங்கள் முருகானந்தன்.

 

Advertisements

About muruganandan

Born and brought up in India, emigrated to Canada and trying to understand and enjoy the world I live in.

Posted on November 1, 2010, in Eulogy. Bookmark the permalink. Leave a comment.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: