In pursuit of a perfect dentist !!!

ஒரு பல்லின் புலம்பல்

இது ஒரு கீழ்வரிசைக் கடைவாய்ப் பல்லின் கண்ணீர்க் கதை

ஒன்றா இரண்டா ஐம்பது வருடங்கள் – அரை நூற்றாண்டு காலம் அயராது உழைத்த என்னை அடியோடு புடுங்கி எறிந்து விட்டார்கள். என்னபாவம் செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. 32 பற்களில் நானும் ஒன்றாகப் பிறந்தேன். முன்வரிசைப் பல்லுக்கு கொடுக்கும் பாராட்டும் சீராட்டும் எங்களுக்குக் கிடையாதா. முன்வரிசையில் முதல் பல் முளைத்ததும்  ஊரெல்லாம் காட்டி மகிழ்கிறீர்கள். வெட்டுப்பல்லுக்கு முத்துப்பல் என்ற வர்ணனை, குத்திக் கிழிக்கும் கோரைப்பல்லுக்கு சிங்கப்பல் என்ற பெயர். கடைசியாக வெளியே வருவதலோ என்னோவோ கடைவாய்ப் பற்களை யாரும் கண்டு கொள்வதே இல்லை. ஒரு வேளைக்கு 30 முறை மெல்லுகிறீர்கள் என்று வைத்துக் கொண்டாலும் ஒரு நாளைக்கு குறைந்தது 90 தடவை உங்களுக்காக உணவை கடித்து, உடைத்து, அரைத்து அசைபோட்டுக் கொடுக்கிறோம். இந்தக் கணக்கில் ஆண்டுக்கு 32,850 தடவை எங்களை மேலும் கீழும் பக்கவாட்டிலும் ஓயாமல் உரசிப் பாடாய்ப் படுத்துகிறீர்கள்.

சராசரியாக 70 வருடங்களில் எவ்வளவு உழைக்கிறோம் என்று உங்கள் கணிணியில் தட்டிப் பார்த்து  தெரிந்து கொள்ளுங்கள்.

என்னென்ன எங்கள் மேல் தினிக்கிறீர்கள், சொல்கின்றேன் கேளுங்கள்

இட்லி வடை, தோசை பூரி, இடை இடையே டீ காப்பி

அடை,ஆப்பம் வெள்ளையப்பம் இடியாப்பம் ஊத்தப்பம்

உதிரிப்புட்டு குழாப்புட்டு, கேப்பைப்புட்டு கோதுமைப்புட்டு

வழக்கமான சட்னி சாம்பார், சிலசமயம் சொதி, கொஸ்மல்லி

அரிசி சோறும் திங்கிறீங்க அவலையும்தான் திங்கிறீங்க

அல்வாவைத் திங்கிறீங்க அதிரசமும் திங்கிறீங்க

சப்பாத்தி ரொட்டியும்தான் சமத்துவமா திங்கிறீங்க

சால்னாவில் புரோட்டாவை பிரட்டி பிரட்டி அடிக்கிறீங்க

மரக்கறியும் திங்கிறீங்க மாமிசமும் திங்கிறீங்க

கடலை மிட்டாய் கடிக்கிறீங்க கலப்படத்தால் கலந்து வந்த

கல்லயும்தான் கடிக்கிறீங்க

உப்புப்புளி, உரைப்பினிப்பு ஓவராகத் திங்கிறீங்க

பசிக்குணவு பரவாயில்லை ருசிகென்றோ திங்கிறீங்க

ஒத்தைநாக்கு சொல்லக் கேட்டு எதைஎதையோ வாயில்போட்டு

எத்தனை பற்களுக்கு கடின வேலை கொடுக்கிரீங்க

அத்தனை உணவையும்தான் அரைத்தெடுத்து கொடுக்கிறோமே

சொத்துப் போல் பற்களையும் பராமரிக்கக் கூடாதா

மெல்லுவது எங்கள் வேலை மறுக்கவில்லை மனிதர்களே

உங்களுக்குள் சண்டை வந்தால் பல்லை உடைத்து

கையில் கொடுப்பேன் என்று தானே சவால் விட்டு

சும்மா இருக்கும் எங்களைத்தான் வம்புக்கேன் இழுக்கிரீங்க.

 

கொடுமை கொடுமையின்னு கோவிலுக்குப் போனாக்க

அங்க ஒருகொடுமை ஆடிக்கிட்டு வந்ததுபோல்

பல்லை சுத்தம் செய்ய டாக்டரிடம் போனாலோ

சின்னதாக சிதைவுஒன்று தெரிகிறது என்றுசொல்வார்

சீக்கிரமே அடைக்காவிட்டால் சங்கடங்கள் வந்து சேரும்

பற்குழிதான் பெரிதாகி பல்லையே எடுக்க வேண்டும்

என்றசெய்தி கேட்டவுடன் என்னவர்தான் நடுநடுங்கி

பல்லடைப்பு சிகிச்சைக்கு (filling) சரி என்று சொன்னாரே

சும்மா இருந்தசங்கை ஊதித்தான் கெடுத்தாரே

ஈறில் ஊசிகுத்தி ஈறை உறையவைத்து

பல்லில் ஓட்டையிட்டு எதையோ ஒட்டவைத்தார்

ஒவ்வொன்றாய் பிரச்சினைகள் அதன்பின்தான் வந்தனவே

பல்கூச்சம் பல்வலி பாடாய் படுத்தியதே

பல்லின் மருத்துவரோ சிகிச்சையில் குறையில்லை பல்லின் குற்றமென்றார்.

பல்லுக்குச் சொந்தக்காரர் வலிகுறைக்க வழிவேண்டி மருத்துவர்முன் மறுபடி நின்றார்.

அடுத்தகட்ட நடவடிக்கை வேர்கால்வாய் நிரப்புதல் தான் (root canal).

அதுவும் செய்த பின்னர் பல் சிறிது உடைந்து போக, பல்லுக்கும்

தொப்பி (crown) போட்டார், ஆனால் பக்க விளைவு சொல்லவில்லை.

பக்கத்துக்கு பல்லான என் வேர்தான் வெளிவந்து (expose)

மறுபடியும் வந்ததய்யா வலியும் வேதனையும்.

போட்டாரே இந்த முறை புதுகுண்டை மருத்துவர்தான்

கீழ்வரிசைப் பல்லுக்கு நேர்மேலே பல்லில்லை

யாதுபயன் இப்பல்லால், எடுத்துவிடு என்று சொன்னார்.

தென்னையில் தேள் கொட்ட பனையில் நீர் கட்டாம்

உள்வாயில் ஒருஓரம் ஒதுங்கி நின்ற என்னைத்தான்

கீழ்த்தாடை மரக்கவைத்து(anesthetic) கொடுங்குரடு கொண்டிழுத்து

புடுங்கிவிட்டார் பல்மருத்துவர் – பிழை என்ன நான் செய்தேன்

காலையில் தவறாமல் பல் துலக்கும் மனிதர்களே

இரவிலும்ஏன் எங்களைத்தான் கவனிக்க ம(று)றக்கிறீர்கள்

வந்தபின் தீர்வுக்கு அலையாதீர், மனிதர்களே

வருமுன் காப்பதே நலம் அன்றோ, அன்பர்களே

 

இப்படிக்கு

கீழ்வரிசை கடைவாய்ப் பல்                            Ottawa, ON, Canada 29012011

 

 

Advertisements

About muruganandan

Born and brought up in India, emigrated to Canada and trying to understand and enjoy the world I live in.

Posted on January 29, 2011, in Food. Bookmark the permalink. Leave a comment.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: