Category Archives: Eulogy

My father-in-law

திரு.துரைப்பாண்டியன்

இரங்கல் செய்தி

எங்களுக்கு சேதி சொன்ன செந்திலுக்கு நன்றி

எங்களுக்கும் சேதி சொன்ன செந்திலுக்கு நன்றி

சாரதியாய், சேவகனாய், நலம்பேணும் செவிலியராய்

அத்தையையும் மாமாவையும் ஆதரவாய்ப் பார்த்துவந்த

செந்திலுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த நன்றி

என்ன கண்டார் என்னிடத்தில் தெரியவில்லை – 86-இல்

என்ன கண்டார் என்னிடத்தில் தெரியவில்லை.

மாறுபட்ட கருத்தெதையும் ஏற்கவில்லை – அவர்

வேறுபட்டு நின்றிடவும் தயங்கவில்லை.

தேடிப்போய் பெண்கேட்டோம், தவசி(மாமாவின் நண்பர்) துப்புசொல்ல

நாடியும் சொல்லியதால் தேடிப்போய் பெண்கேட்டோம்.

சீராட்டி, பாராட்டி, வளர்த்துவந்த அவர்வீட்டு செல்லத்தை, செல்வத்தை

ஊர்கூட்டி, உறவுகூட்டி, பொன்பூட்டி, மணமுடித்து என்இல்லம் அனுப்பிவைத்தார்.

மாமனாக ‘ஆனதினால்’ மாமனார் – அவர் எனக்கு

மாமனாக ‘ஆனதினால்’ மாமனார்

அவர்மகளை மணந்ததினால் மருமகன் – மனம் விரும்பி

அவர்மகளை மணந்ததினால் மருமகன்

தன்மகளைத் தாரை வார்த்துக் கொடுத்தவர் – தங்கநிகர்

தன்மகளைத் தாரை வார்த்துக் கொடுத்ததனால் ‘கொடுத்தவர்’ – அவர் கொடுத்தவர்.

பெற்றமகளைக் கையேந்தி கொண்டதனால் கொண்டவன் – அவர்

ஒற்றைமகளைக் கையேந்தி கொண்டதனால் கொண்டவன் – நான் கொண்டவன்.

மாமாமறைந்தசெய்தி கேட்டுமனம் கலங்கவில்லை

ஆமாநிறைந்தவாழ்வு வாழ்ந்துசென்றார் கவலையில்லை.

சங்கரநயினார்கோவிலுக்குப் போவாரா தெரியவில்லை – ஆனால்

சங்கரன்கோவில்ஊரை அவர் சாகும்வரை விடவேயில்லை

கொடியநோய் வந்தெதுவும் தாக்கவில்லை – அவரை

நெடுநாட்கள் படுக்கையிலே தள்ளவில்லை.

விபத்தில்லை, விபரீதமில்லை, அகால மரணமில்லை.

பிடித்த ஊரில், பிடித்த வீட்டில், பிடித்தவர்கள் அருகிருக்க

அமைதியாக அதிகாலை அவ்வுலகம் சென்றுவிட்டார்.

ராமசிவன் கொடுத்ததைத்தான் பரமசிவன் எடுத்துக்கொண்டார் – பரவாயில்லை.

வள்ளியம்மாள் பெற்றமகன் வாழ்ந்து முடித்தபின்தான் வைகுண்டம் சென்றுவிட்டார் – வருத்தமில்லை.

நிலையாமை நினைவுறுத்த நெற்றியில் நீர்அணியும் நாம் – இந்தஇழப்பினால்

நிலைகுலைந்து போகாமல், இறையடி சேர்ந்த துரைப்பாண்டியன் அவர்கள் ஆன்மா சாந்தி

அடையவும் அவர் விட்டுச்சென்ற சந்ததி ஒற்றுமையாக வாழவும் பிரார்த்திப்போம்.

நம் அனைவருக்காகவும் மறைந்த நம் மூதாதையர்களின் ஆசி வேண்டும் முருகானந்தன்.

ஆட்டவா, கனடா                                                     10 December 2012

Advertisements

Kala கலா

India visit 2011 - Kala veetil...

29th October 2011

கலா,
ஐவராகப் பிறந்தோம், உதயனோடு அறுவரானோம், ஒரு வீட்டில் வளர்ந்தோம், ஒன்றாக உணவு உண்டோம், அன்பும் காட்டினோம், அடித்தும் கொண்டோம்.
சரஸ்வதி பெற்ற கலாவதி, அறுபது வயதில் உலகை விட்டாய், இது என்ன (அ)நீதி ?
உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசத் தெரியாத நீ, இரட்டைக் குடம் போட்டு தண்ணீர் எடுத்த நீ, நம் வீட்டுக்கு விறகு சுமந்த நீ, காலனிடம் தோற்றாயே, இது என்ன நியதி?
கலா – உன் இரண்டெழுத்து பெயரைப்போல உன் உலகமும் மிகச்சிறியது. சினிமா, புடவை, பிரியாணி, நகை, மாமா, மகள், மகன், அவ்வளவுதான். வாழ்வின் எல்லைகளைக் சுருக்கிக்கொண்ட நீ, சில ஆண்டுகளாக பேச்சையும் குறைத்துக் கொண்டாய். வாயாடிப் பட்டம் பெற்ற நீ, இன்று வாய் மூடி மௌனமானாய்.
எட்டு வயது மகனை இடுப்பில் சுமந்தாயே, எங்கே போனது உன் பலம்? இன்று எமனிடம் தோற்று எங்களைப் பிரிந்தாயே.
பேச்சை நிறுத்த மாட்டாயா என்று எல்லோரும் உன்னைத் திட்டியிருக்கிறோம். ஆனால் கடந்த சில வருடங்களாக, இன்னும் கொஞ்சம் பேச மாட்டியா என்று என்னை ஏங்க வைத்தாய் .
மகனுக்காகவும், மகளுக்காகவும் மனசாட்சியைக் கூட பல நேரங்களில் ஓரம் கட்டிய பெண்-திருதராட்டினன் அல்லவா நீ.
சமையலில் அம்மாவின் ஒரே வாரிசு நீ தானே, நீ வறுத்தெடுத்த கோழிக்காலும் வாசமான பிரியாணியும் மறக்கலியே இன்னும் நானே. நீ வடித்தெடுக்கும் வெள்ளைச்சோறும் வதக்கி வைக்கும் வெங்காயக்கறியும் கேட்டு வாங்கி சாப்பிடுவேனே.
அம்மா மறைந்திட்ட அதே ஐப்பசியில் நீயும் மறைந்தாயே. பூவோடும் பொட்டோடும் பூலோகம் தனைவிட்டு மேலோகம் சென்றாயே. உன் ஆன்மா சாந்தி அடைய அந்த ஆண்டவனையும் நம்மைப் பெற்ற அம்மா அப்பாவையும் பிரார்த்திக்கும்

உன் தம்பி முருகானந்தன்

Ramanikaran

My maternal uncle Ramanikaran passed away this September. தாய்மாமனுக்கும் ஒரு கடிதம்

Ottawa, Canada

18 September, 2010

 

மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் போகும் மாமா ரமணிகரன் அவர்களுக்கு நான் எழுதும் இரங்கல் கடிதம்.

உங்களைப்பற்றிய சில நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதே நான் உங்களுக்கு செய்யும் இறுதி மரியாதையாகும்.

 

அப்பா, அய்யா , ஐயப்ப மாமா இவர்களுக்கு அடுத்து நீங்கள்தானே எனக்கும் நம் குடும்பத்தாருக்கும் ஒரு தூணாக , துணையாக , வழிகாட்டியாக இருந்தீர்கள்.

ஏழைக்குடும்பத்தில் பிறந்தாலும் உங்கள் எண்ணங்களும் செயல்களும் ஏழ்மையை பிரதிபலித்தது கிடையாது.

ஊர்க்குருவியாக இருக்க நீங்கள் விரும்பியதே இல்லை. உயரப் பறக்கும் பருந்தாவதே உங்களின் லட்சியம்.

அமைதி உங்களுக்குப் பிடிக்கும் அளவுக்கதிகமான சத்தம் பிடிக்காது, அநாகரிகமான சம்பிரதாயங்கள் பிடிக்காது.

 

தந்தையோடு கல்வி போம் – உங்கள் விஷயத்தில் உண்மையானது .

உயர் கல்விக்கு வாய்ப்பில்லை, உறவினருக்கு பாரமாக விருப்பமில்லை.

எனவே இந்திய ராணுவத்தில் உங்களை இணைத்துக்கொண்டீர்கள்.

ராணுவம் உங்கள் உடலையும் உள்ளத்தையும் ஒரு சேர உறுதிப்படுத்தியது.

ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று மொழிகளில் தேர்ச்சி பெற்றீர்கள்.

முத்தமிழில் மூன்றாம் தமிழாம் நாடகக்கலையில் தீராத தாகம் கொண்டீர்கள்.

ஊருக்கு வரும் போதெல்லாம் உதயனையும் முருகனையும் கூட்டிகொண்டு உலா வருவீர்கள்.

அய்யா என் பெயரை ஆங்கிலத்தில் எழுத கற்றுக்கொடுத்தார் , நீங்கள் ஹிந்தியில் எழுத சொல்லிக்  கொடுத்தீர்கள்.

உரிய நேரத்தில் உடன் பிறந்தவளின் மகளை மணந்து உறவை வலுப்படுத்தினீர்கள்.

 

அப்பாவுக்கு வாணி விலாஸ் காபி, உங்களுக்கு ஆரியபவான் காபி.

வாங்கிவரும் எங்களுக்கு அதில் கிடைக்கும் பாதி.

நம் பட்டாசாலைதான் உங்களின் நாடக மேடை. அடுப்புக்கரியை பூசிக்கொண்டு ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோவை

அறிமுகப்படுத்தினீர்கள் – மறக்கவும் மன்னிக்கவும் சொற்றொடர்

பிரயோகத்தை உங்களிடம்தான் முதலில் கேட்டேன்.

முப்படையில் சேருவதற்கு முதற்படியாக எங்களை NCC-ல் சேர வைத்தீர்கள். புகைப்படக் கலையில் ஆர்வம் வர எனக்கு கேமரா வாங்கி கொடுத்தீர்கள்.

 

மெட்ராஸ் சிங்காரச்சென்னை ஆவதற்கு 30 வருடங்களுக்கு முன்பே

எங்களுக்கு,  கடற்கரை, கந்தக்கோட்டம், கார்பொரேசன் நீச்சல்குளம்,

ஆலந்தூர், பரங்கிமலை, மைலாப்பூர், மவுண்ட்ரோடு,

கோட்டை, கொத்தவால் சாவடி, கோடம்பாக்கம் விஜயா வாகினி

இன்னும் பல இடங்கள் கூட்டிச்சென்று காண்பித்தீர்கள்

 

எனக்கும் உதயனுக்கும் சபாரி சூட் வாங்கித்தந்து செலவை சரிக்கட்ட

சேலை பில்லை சரி செய்து ஜமுனாவிடம் சிக்கிக்கொண்டீர்கள்.

 

ஆண் ஒன்று பெண் ஒன்று அளவாகப் பெற்றீர்கள்

பூபேந்திரா, பூமா எனப் பெயரிட்டு மகிழ்ந்தீர்கள்

மதுரையில் நான் மனம் கலங்கி மதிச்சயம் தான் வந்தபோது

எது உண்மை என்றெனக்கு எடுத்துரைத்து தேற்றினீர்கள்.

 

நான் பொறியியல் முடித்தவுடன் மாநிலத் தலைநகரில்

நேர்முகத் தேர்வுக்கு கூடவே வந்திருந்து பணி கிடைத்த

செய்தி கேட்டு பாராட்டி பரிசளித்து பட்டினப்பாக்கத்தில்

பாதுகாப்பாய் விட்டு விட்டு திண்டுக்கல் திரும்பினீர்கள்

 

எனக்கு மட்டுமா நம் வீட்டில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில்

ஒவ்வொரு காலகட்டத்தில் முடிந்தால் பணஉதவி இல்லையேல்

உடல் உழைப்பு மறுக்காமல் செய்தீர்கள். அனைத்துக்கும் மேலாக

ஈடில்லா பாசத்தை சம்யுக்தா என்ற யாழினிக்குத் தந்தீர்கள்.

 

உங்களுக்குத் திறமைகள் பலஇருந்தும் ஒரு திருப்புமுனை கிடைக்கவில்லை. நீங்கள் கலைகள் பல கற்றும் வெற்றிக் களம்ஒன்று அமையவில்லை. உயிருக்குப் போராடும் வேளையில் கூட நீங்கள் ஓடி ஓடி சேவை செய்த அந்த தெய்வம் வந்து உதவவில்லை.

 

உங்கள் வாழ்க்கைப் போராட்டத்தைப் பார்த்துக் கற்றதை விட

உங்களின் மரணப் போராட்டத்தைக் கேட்டு நான் உணர்ந்த

உண்மையின் வலி அதிகம் – அந்த உண்மை

பாத்திரமறிந்து பிச்சை போடு தெய்வம் அறிந்து கோவில் கட்டு

 

கடந்த காலம் திரும்ப வராது, அதனால் நீங்கள் விட்டுச் சென்ற குடும்பத்துக்கு சீரான நிகழ்காலமும் சிறப்பான எதிர்காலமும் அமைய எல்லாம் வல்ல இறைவனை இருகரம் கூப்பி வணங்குகிறேன். அவர்களின் நல்வாழ்வில்தான் உங்கள் ஆத்மா சாந்தி அடையும் என்று திடமாக நம்புகின்றேன்.

 

என்றும் உங்கள் முருகானந்தன்.

 

Navaneethakrishnan

Thiru.Navaneethakrishnan, Latha’s uncle (Chithappa) passed away in 2008 (Jan 2nd). He was more like a friend to me. Once again the only way I can show my respect to him is to write what I think about him.  அமரர் திரு நவநீதகிருஷ்ணனுக்கு அஞ்சலி

அத்தைக்கு என் அஞ்சலி

irangal paa அத்தைக்கு என் அஞ்சலி – மறைந்த நாள் – 2007-01-05

என் மாமியாருக்கு நான் எழுத்தால் கட்டிய நினைவு மண்டபம்

இன்னும் கொஞ்சம் நாட்கள் இருந்திருக்கலாம்

என் மனைவியின் அம்மாவுக்கு நான் எழுதும் இரங்கற்பா

எத்தனை பேருக்கு அவர்கள் பெயரில் தெரு இருக்கிறது

என் அத்தையின் பெயர் கோமதி

அவர்கள் கட்டிய, கட்டிக்காத்த வீட்டின் பேரிலும் கோமதி

அந்த வீடு இருக்கும் தெரு பேரிலும் கோமதி

கோழி குஞ்சுகளை காப்பது போல் அல்லவா பெற்ற மூன்று பேரையும் காத்தார்கள்

பிள்ளைகளை மட்டுமா, கூடப் பிறந்தவர்களையும் தான் அவர்கள் ஒரு போதும் விட்டுக் கொடுத்ததில்லை

எனக்கு கந்த புராணம் தெரியும், பெரிய புராணம் தெரியும், சீறாப்புராணம் தெரியும்

என் அத்தை படித்ததெல்லாம் இரண்டே புராணங்கள் தான் – பாலு புராணம் சேகர் புராணம்

நேரிலாகட்டும் டெலிஃபோனில் ஆகட்டும் என் அத்தை பேசும் ரெண்டாவது வார்த்தை ஒன்று சேகர் ஆக இருக்கும் அல்லது பாலுவாக இருக்கும் .

நம் எல்லோருக்கும் தெரியும் மூன்றாவது நான்காவது வார்த்தைகள் என்ன என்று

வேறென்ன ராதி சுலோ அல்லது சுலோ ராதி.

எல்லாம் தெரியும் என்று இறுமாப்புடன் இருந்தேன் என்னயே குழப்பி விட்டார்கள் இந்தியாவை கண்டு பிடித்தது பாலுதான் என்று சொல்லி.

அத்தோடு விட்டார்களா அமெரிக்காவின் அடுத்த ப்ரெசிடென்ட் அவர்கள் மகன் சேகர் தான் என்பார்கள்

ஆயிரம் திட்டுவார்கள் அவர்கள் வீட்டு சீமந்த புத்திரனை அதாவது நம்ம சுகுமாரனை

எரிகிற நெருப்பில் நாமும் கொஞ்சம் எண்ணை ஊத்துவோமே என்று இடையில் நாம் பேசினாலோ

நமக்கு கிடைக்கும் எசவும் பாட்டும்

அவர்கள் பேசுவதை கேட்டு

பலமுறை கோபப்பட்டேன்

பலமுறை வருத்தப்பட்டேன்

பலமுறை வியப்புற்றேன்

இப்பல்லாம் பொறமைப்படுகிறேன் – எனக்கு ஒரு அக்காவோ அம்மாவோ இவர்கள் போல் இல்லயே என்று.

இருபது வருடங்கள் ஆகின்றன, எனக்கு திருமணம் ஆகி,

எனக்கு ஆதரவாக இவர்களை பேசவைக்க நான் எடுத்த முயற்சிகள் எல்லம் தோல்வி

அந்த தோல்விகளால் நான் துவளவில்லை சந்தோஷம்தான் பட்டேன் – இப்படி ஒரு மாறாத விசுவாசமும் கொஞ்சம் வெறி கலந்த பாசமும் அவர்கள் குடும்பதின் மீது வைத்திருக்கிறார்களே என்று.

இருபது வருடங்கள் ஆகிவிட்டன எனக்கு என் அத்தை கிடைத்து.

இதுவரை எனக்கு புரியவில்லை அவர்கள் என்னை வெறுத்தார்களா இல்லை நேசித்தார்களா என்று.

சட்டையே ஒழுங்கா போட தெரியாத எனக்கு ஒரு முறை அல்ல இரண்டு முறை suit வாங்கி கொடுத்தார்கள்.

சின்ன சங்கிலியோட, சேர்த்து கொஞ்சம் தங்கம் போட்டு பெரிய சங்கிலி செய்து கொடுத்தார்கள்.

எனக்கு, மோதிரம் வாங்கி கொடுத்தார்கள், என் மகன்களுக்கு, இடுப்பு செயின் போட்டு அழகு பார்த்தார்கள்.

மகன்களுக்கு, இடுப்பு செயின் போட்டு அழகு பார்த்தார்கள், எனக்கு, மோதிரம் வாங்கி கொடுத்தார்கள் – மாற்றி போட்டிருக்க கூடாதா – இன்று இந்தியாவின் பணக்காரர்களில் நானும் ஒருத்தனாக ஆகி இருப்பேனே.

எனக்கு எல்லாம் கொடுத்தார்கள், அவர்களுக்கு திருப்பி கொடுக்க என்னிடம் என் எழுத்தை தவிர ஒன்றும் இல்லை.

என்னடா என் அத்தையின் மகளைப் பற்றி சொல்ல வில்லயே என்று பார்க்கிறீர்களா

உடல்தான் இரண்டே தவிர உள்ளம் ஒன்று அவர்களுக்கு, சிந்தனை ஒன்று அவர்களுக்கு,

உடன் பிறந்தவர்கள் மேல் வைக்கும் பாசமும் ஒரே மாதிரிதான் இருவருக்கும்

ஒருவர் சிம்மம் ஒருவர் விருச்சிகம் இருவருமே அனுஷம்

இன்னமும் விளக்கம் வேண்டுமா உங்களுக்கு

சங்கம் வளர்த்த மதுரையில் படித்தேன் அதனால் கம்பன் என் சித்தப்பா என்று நினைத்துகொண்டிருந்தேன்.

என் அத்தையை சந்திக்கும் வரை.

அவர்கள் பேசுவதை கேட்ட பிறகுதான் தெரிந்தது “வித்தியாசமா இருக்கு” ங்கிற ஒரு வார்த்தைக்கு 10,000 அர்த்தங்கள் இருக்கு என்று .

ஆமாம் என்று சொல்கிறார்களா அல்லது இல்லை என்று சொல்கிறார்களா என்று புரியாது பலசமயம்

ஆமோதிக்கிறார்களா இல்லை எதிர்க்கிறார்களா என்றும் புரியாது சிலசமயம்

காந்தியை சுட்டது கோட்சே என்பேன், அதைத்தான் நானும் சொல்றேன் என்று சொல்லிகிட்டே காந்தி தான் கோட்சேயை சுட்டார் என்பார்கள்.

இந்த லதா கிட்டே அந்த லதா வைக்கிற சாம்பார்தான் best என்பார்கள்

அந்த லதா கிட்டே இந்த லதா வைக்கிற சாம்பார்தான் super என்பார்கள்.

பாவம் எங்க மாமா என்ன பாடு பட்டிருக்கிறார் இத்தனை வருஷம்.

ஆனால் அவர்கள் எண்ணத்தில் இருந்ததெல்லம் மூன்று பிள்ளைகளும் “அவயத்து முந்தியிருக்க” வேண்டும் என்பதுதான்.

ப்ரீத்திக்கும் ஆர்த்திக்கும் போட்டு அழகு பார்த்தது போல் என் பேத்திகளுக்கும் பட்டும் பவளமும் வாங்கித்தருவார்கள் என்று நினைதிருந்தேன்

ஏமாற்றி விட்டுப் போய்விட்டார்கள்.

நான் அவர்களை அத்தை என்று அழைப்பதில்லை என்று வருத்தப்படுவார்களாம்

இதோ, ஆயிரம் முறை சொல்லிவிட்டேன் அத்தை என்று, கொஞ்சம் பொறுத்திருந்தால் கேட்டிருக்கலாமே.

இன்னும் கொஞ்சம் நாட்கள் இருந்திருக்கலாம் என் பிள்ளைகள் பட்டமளிப்பு விழா பார்க்கும் வரை

இன்னும் கொஞ்சம் நாட்கள் இருந்திருக்கலாம் அவர்கள் வேலைக்கு போகும் வரை

இன்னும் கொஞ்சம் நாட்கள் இருந்திருக்கலாம் அவன்களின் திருமணம் முடிக்கும் வரை

இன்னும் கொஞ்சம் நாட்கள் இருந்திருக்கலாம் என் பேரன் பேத்திகளுக்கு முதல் பிறந்த நாள் வரை

இன்னும் கொஞ்சம் நாட்கள் இருந்திருக்கலாம் ….

முருகானந்தன்