Category Archives: Events

Pongal Vizhaa 2018

ஆட்டவா தமிழ்ச்சங்கம் 

பொங்கல் விழா – ஜனவரி 13, 2018

இதற்குத்தானே ஆசைப்பட்டேன்

சொன்ன நேரத்துக்கு முன்பே சென்றேன். ஆண்டு உறுப்பினர் கட்டணம், நுழைவுக்கட்டணம் செலுத்தி உள்ளே சென்றேன். அலங்காரப் பொங்கல் பானையை ஆசையுடன் பார்த்தேன். அணங்குகள் அங்கும் இங்கும் அலைந்து அலங்கரிக்கும் பணி கண்டேன்.
தெரிந்த, தெரியாதவர்களுடன் சிறுபேச்சு,
அனிதா, வருண், செந்தில், சாந்தி அறிமுகம்,
ஆர்த்தி கணேஷ் புகைப்படம்,
தாமதமாக ஆரம்பம்,
மிக மிகத் தாமதமான ஆரம்பம்,
தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவக்கம்,
பாரம்பரிய பரதம்,
இறை வணக்கம்,
இயற்கைக்கு வணக்கம்,
இயல், இசை, நாடகம்,
பொங்கல் விளக்கம்,
ஆட்டமும் பாட்டுமாக அடுத்தடுத்து அமர்க்களம்,
சிரிக்கவும் சிந்திக்கவும் இறுதியில் ஒரு பட்டிமன்றம்,
ராஜேஷ், காஷ்யப் – தொய்வில்லா தொகுத்தளிப்பு
கொட்டிய பனி, கடுங்குளிர், மற்ற நிகழ்ச்சி,
மீறித்திரண்ட தமிழர் கூட்டம்,  துணைக்குத் தென்னிந்தியர்கள்,
சங்கத்தின் சரித்திரத்தில் திருப்புமுனையாக,
ஆட்டவா மேதகு மேயர், நேப்பியன் கௌன்சிலர்,   இந்தியா தூதரக அதிகாரி,
இவர்களின் வருகை,
முடிவாக பசித்த வயிறுக்கு வாழை இலையில் சாப்பாடு,

இதற்குத்தானே ஆசைப்பட்டேன்,,,
இனிவரும் ஒவ்வொரு   நிகழ்ச்சியும்
இதைவிட வெற்றிபெற வாழ்த்தும்

உங்கள் நண்பன் முருகானந்தன் (ஆனந்த்)

Advertisements

கனடா – Canada

கனடா – இந்த மண்ணைப் பற்றி…

ஆல்பெர்டா

பாகம் – 2

கேல்கேரி (Calgary) பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். 

மொட்டைமாடித் தோட்டங்கள்,  முக்குக்கு முக்கு சிற்பங்கள் 

 செயற்கை நீருற்று, சுவர் முழுக்க செடி கொடிகள் 

ஏழாம் சாலையிலே எழில்மிகு மின்வண்டி (7th Avenue C-Train)

பகட்டான எட்டில் பலரக உணவகங்கள் (Stephan Avenue)

ஒன்பது நடுத்தெரு சந்திப்பில் உயர்ந்து நிற்கும் கோபுரம் (Calgary Tower)

பத்தாம் சாலைவரை பாதசாரி பாலங்கள் (+15 Skywalk)

நகர் மையம் முழுவதும் வானளாவிய கட்டிடங்கள் 

எண்ணெய் நிறுவனங்கள் எண்ணிலடங்கா அலுவலகங்கள் 

காப்பீட்டுக் கழகங்கள், வங்கிகள், பல்பொருள் அங்காடிகள்  

கண்கவர் பூங்காக்கள், அருங்காட்சி  அகங்கள்  (Devonian Gardens, Glenbow Museum)

 பொழுது போக்கு அரங்குகள் (Entertainment district)

கேளிக்கை கூடாரங்கள் (Night Life district)

இரண்டு இடங்களிலும் இந்தியர்களை, குறிப்பாக தமிழர்களை பார்த்ததில்லை.

இளைய தலைமுறையை சிலநேரம் கண்டதுண்டு. நம்மைக் கண்டால் அடுத்த முறை இடத்தை மாற்றி விடுகிறார்கள். (வீட்டில் தான் உங்க மூஞ்சிய பாக்குறோமே,,,இங்கேயுமா? என்று அவர்கள் உள்மனது பேசுவது கேட்டது)

பிரஞ்சு மொழி பிரயோகம் கேட்கவேயில்லை 😉

நகரத் தந்தை (Mayor) நஹீத் நென்ஷி 

முதல் முஸ்லிம் மேயர் – ஒரு பெரிய வடஅமெரிக்க நகரத்துக்கு 

உணவுக்குப் பஞ்சமில்லை – பலவிதம், பலரகம், பலதரம் 
காசுக்கேத்த பனியாரம் 

மாட்டிறைச்சிக்கு பெயர் பெற்ற மாநிலம் –
பாம்பு திங்கும் ஊரில் நடுத்துண்டு 

கேட்டு வாங்கி சாப்பிடு.
பிரேசில் நாட்டாரின் ஸ்டேக் உணவகங்கள் பிரபல்யம்.
தீயில் சுட்ட துண்டுகளை நம் தட்டில் தள்ளும் லாகவம் 
ஒரேவிலை அளவே இல்லை 

கேல்கரியில் ஒன்றே ஒன்றுதான் பார்க்க வேண்டும், முடியும் என்றால் ….
அது இந்த பாலம்தான் ...

dsc02621

அடுத்த வாரம் – டைனசார்கள் பற்றி 

அதுவரை அன்புடன் ஆனந்த் (முருகானந்தன்)

30th Wedding Anniversary

Dear Latha,

30 years – that is how long we (Latha Anand and I) have been married. Yes, It was an arranged marriage, planned and executed in 3 short weeks. We were not “made for each other” then nor today. We disagree on 99 things and the only thing that kept us going was, is we always agree on “moving forward”. I know when to step back (….most of the times) and when to put my foot firmly down (….yet to happen 😦 ).

30 years since we got married. முழுதாக முப்பது வருடங்கள் ஓடிவிட்டன, உன்னைக்கைபிடித்து.

உன்னைக் கொடுத்தாய், பின் உள்ளம் கொடுத்தாய்
உறவுக்கு சாட்சியாக இரு மகவைக் கொடுத்தாய்
இன்பம் கொடுத்தாய் இனிய வாழ்வைக் கொடுத்தாய்
இல்லறத்தில் இன்று வரை துணையாய் நின்றாய்
கனவைக் கொடுத்தாய், கனவு நனவாக காரணமானாய்
இந்த காட்டாறுக்கு  கரை கட்டி,  கால்வாயாக்கினாய்
சிக்கனமாய் வாழ்ந்து செலவைக் குறைத்தாய்
தனக்கு மிஞ்சி தான தர்மம் – வாதத்தை முன் வைத்தாய்
செல்ல மகன்களை சீராய் வளர்த்தாய்
நம் குடும்பம் தழைக்க ஓயாது நீ உழைத்தாய்
சரிந்தால் தாங்கி நின்றாய், சாய்ந்து கொள்ள தோள் கொடுத்தாய்
சங்கடங்கள் வந்தபோது சாதுர்யமாய் சமாளித்தாய்
சுத்தம், சுகாதாரம் இரு கண் போல பாவித்தாய்
கத்தி இன்றி இரத்தம் இன்றி என்னைநீ வெற்றி கொண்டாய்
உணர்வு வழி வாழ்க்கைக்கு அறிவு வழி அணை போட்டாய் – என்
சத்தத்திற்கு பயந்ததில்லை, சண்டைக்கும் சளைத்ததில்லை – உனக்கு
சரி என்று பட்டுவிட்டால் அதை சாதிக்காமல் விட்டதில்லை – அடுத்த
முப்பதை இன்னும் ஒற்றுமையாக வாழ முயற்சிப்போம்

dsc02723-2
30 years so far…

Shreya Arangetram – June 27th, 2015

Dear friends and relatives,
June 27th – two events on the same day. Our college reunion in New Jersey and Shreya’s Arangetram in Missouri. கலை கல்லூரியை பின்தள்ளி விட்டது. I ended up changing my ticket to St.Louis and it was worth it.

நினைவை விட்டு நீங்கவில்லை, நெஞ்சை விட்டு அகலவில்லை

மாதம் ஒன்று ஓடியும் மனதை விட்டு மறையவில்லை
நினைவை விட்டு நீங்கவில்லை, நெஞ்சை விட்டு அகலவில்லை
ஆனந்த்(சுதா) மகள் அரங்கேற்றம்
நினைவை விட்டு நீங்கவில்லை, நெஞ்சை விட்டு அகலவில்லை
ஷ்ரேயாஉன்   ஆடை, அணி, அலங்காரம்,
நினைவை விட்டு நீங்கவில்லை, நெஞ்சை விட்டு அகலவில்லை
அடவுகளின் அணிவரிசை
நினைவை விட்டு நீங்கவில்லை, நெஞ்சை விட்டு அகலவில்லை
முத்திரைகள் சித்திரமாய்
மனதை விட்டு மறையவில்லை மனத்திரையில் மங்கவில்லை
கண்ணசைவு, கைஅசைவு கணக்கான காலசைவு
கண்ணைவிட்டு மறையவில்லை கருத்தைவிட்டு விலகவில்லை
இறைக்கும், சபைக்கும் புஷ்பாஞ்சலி
மோதகப் பிரியன் பாடலுக்கு முதல் ஆடல்
கன்னியை நோக வைத்த கண்ணனிடம் நீ கேட்ட நியாயம்
எங்களுக்கும் வந்ததம்மா மனதோரம் கோபம்
கொள்ளிடம், காவிரி,  இடையுறங்கும்  ரங்கநாதா
பள்ளிகொண்ட காரணத்தை சொல்லும்மையா என்று நீ
கேள்விமேல் கேள்விகேட்டு, கேள்விக்கு பதிலும் சொல்லி
பக்தியுடன் பரவசத்தை பதத்தில் தந்தாய் தத்ரூபம்
ஆடற்கலை இலக்கணத்தை அனைவருமே அறியுமுன்னர்
ஆண்டாளாய் அவதரித்து ஆட்டத்தை முடித்துக்கொண்டாய்
குழலைக் கொண்டையாக்கி, குடை ஜிமிக்கி காதிலாட
கனாக் கண்டகோதையை கண்முன்னே கொண்டுவந்தாய்
வியப்பு, வெறுப்பு, விரகம், வீரம்,கனிவு, காதல், கம்பீரம்,
பக்தி, பயம் பரவசம், தவிப்பு, தாகம் – அனைத்தும் தந்தாய்
செங்குழம்பு தீட்டிய செந்தாமரைப் பாதங்கள்
தாங்கும் தரையை தட்டித் தடவி எழுப்பிய சத்தம் சங்கீதம்
நீளப்பொட்டு, நெற்றிச்சூடி, கைவளை, காதணி, காற்சதங்கை
மாட்டி, மாலை, ஒட்டியாணம், பின்னல், பில்லாக்கு
மாதம் ஒன்று ஓடியும் மனதை விட்டு மறையவில்லை
நினைவை விட்டு நீங்கவில்லை, நெஞ்சை விட்டு அகலவில்லை
ஸ்மிதா ராஜன் சொன்னது போல், இது தொடக்கம்தான், முடிவல்ல
மறுபடியும் உன்னை மேடையில் காண விரும்பும் முருகானந்தன்
…..நிகிதாவுடன்…..☺

Sanjana Sundar

சஞ்சனா சுந்தர் – அரங்கேற்றம்

ஆட்டவா தமிழ்ச்சங்கத்தின் வருடாந்திர கலைநிகழ்ச்சி இன்று. போகமுடியவில்லை. கொஞ்சம் வருத்தம். வரப்பிரசாதமாய் வந்தது வலைத்தள இணைப்பு
சஞ்சனா சுந்தரின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியின் காணொளிப்பதிவு.
கண்கொள்ளா காட்சிகள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு,
அடவுகளின் அணிவகுப்பு,
இசையும் நடனமும் இணைந்து தந்த விருந்து.
பாட்டும் பரதமும் என் வருத்தத்தை மாற்றிய  அருமருந்து.

பிரியங்கா (அக்கா)வின் அபிநயம் கலந்த அருமையான தொகுப்பு, பிசிறில்லா பிழையில்லா பரிசளிப்பு.

விளையும் பயிர் முளையிலேயே தெரியும். தெரிந்தது பல வருடங்களுக்கு முன்பு – ஆட்டவா தமிழ்ச்சங்க மேடையில்.
நிரூபணமானது நேற்று. என் உள்ளம் அறிந்தது உறுதியானது.

கடவுளின் கருணை, அம்மா அப்பா அன்பு, ஆதரவு, தாத்தா, பாட்டி ஆசீர்வாதம், குருவின் கிருபை – அனைத்துக்கும் மேலாக, சஞ்சனாவின் பகீரத பிரயத்தனம்.

விதைத்தது இருவர். விளைச்சலின் பயன் நம் அனைவருக்கும்.

சரிந்து அமர்ந்த என்னை நிமிர வைத்த “சப்தம்”
நிமிர்ந்து அமர்ந்த என்னை நிற்க வைத்த “வர்ணம்”

தில்லைநாதனுக்கு முதல் மரியாதை – அவன் பெற்ற
தகப்பன் சுவாமிக்கு தனி மரியாதை

சஞ்சனா – சப்தத்தில் சிற்றாறு – வர்ணத்தில் ஆடிப்பெருக்கு
விழிகளாலும் விரல்களாலும் நீ போட்ட பல கணக்கு
சொல்லிகொடுத்த ரோஹிணிக்கு எங்கள் பாராட்டு

குழல்வாரி பின்னலிட்டு பூச்சூடி, திலகமிட்டு காத்திருந்த சஞ்சனா
காலைமுதல் இரவுவரை உன்னைக் காக்கவைத்த கந்தனுக்கு
தமிழ்க்கடவுள் என்ற பெயர் சரிதானா – அவன் செயல்தான் முறைதானா

சொல்லடி, மனம் கல்லோடி?
விதவிதமாய் அபிநயத்து கெஞ்சலும் கொஞ்சலுமாய் நீகேட்ட பின்னாலே,
வந்திருக்கவேண்டுமே குமரன் அவன் ஓடோடி
நெஞ்சழுத்தக்காரனோ பழனியாண்டி?

அம்மா பாடல், அழகுமகள் ஆடல்
சாந்த சொரூப வாமன, ரௌத்ர மூர்த்தி நரசிம்மா,
மிச்ச அவதாரம் எப்பம்மா, சீக்கிரம் சொல்லு சஞ்சனா

கன்னல் கைபிடித்த ராஜ ராஜ ராஜேஸ்வரி
கண்கள் கலங்க வைத்தாய் காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி
கருணை கலந்த கம்பீரம் – தத்ரூபம், அற்புதம்

சிறப்புப் பரிசாக தீராத விளையாட்டுப் பிள்ளை – பாடிய
சங்கல்ப் என்றென்றும் ஆட்டவாவின் செல்லப்பிள்ளை

பார்த்தேன், ரசித்தேன், கண்டேன், களித்தேன் –
நான் தவற விட்டது ஒன்றுதான் –
நிகழ்ச்சிக்குப்பின் நீங்கள் தந்த விருந்து

On a cold January morning…

மார்கழிக்குளிர். மஞ்சத்தை விட்டுஎழ மனமில்லை.
பள்ளி எழுப்ப பாவையர் வரவில்லை.
பறவை ஒலி கேட்டு எழுந்தேன்.
பலகணியில் இரட்டைக் குருவிகள்.
ஒரு முறையாவது அடுத்தவர் பசி போக்கி, பின் உண்ண மாட்டயா நீ ?
– என்று கேட்பது போல் இருந்தது..
இரை என்னபோடுவது என்றெனக்கு தெரியவில்லை
பாக்கி இருந்தது பாசுமதி அரிசி.
வீசிய கொஞ்சத்தை தாங்கள் மட்டும் உண்ணாமல்
கூட்டத்தை கூவி அழைத்து உண்டன ரெண்டும்.
பகிர்ந்து தின்ற பறவைக்கூட்டம் பறந்து சென்றது.

இனம்புரியாத மகிழ்ச்சி எனக்குள் ஒரு நெகிழ்ச்சி

Sweet September

சும்மாவா சொன்னார்கள் ஸ்வீட் செப்டெம்பர் என்று ….

மகன்களின் வருகை, நண்பனின் மகள் வருகை, எங்களின் 28வது திருமணநாள்

இடையறாத உழைப்புக்கு நான்கு நாட்கள் விடுமுறை

களக்காடு கனடா பார்க்க வந்தது முதல் முறை

கடந்த நான்கு நாட்கள்
இனிய நான்கு நாட்கள்
நால்வர் ஐவராக வாழ்ந்த நான்கு நாட்கள்
கொடுக்க மறந்த ஒன்றை இறைவன் கொடுத்த நாட்கள்
துவங்கு நொடி அறிவேன் முடிந்த நொடி மறவேன்
நகர்ந்த மாயம் தெரியவில்லை – அந்த நான்கு நாட்கள்

செட்டி மேடு விதை ஒன்று சென்னையிலே பிறந்து வளர்ந்து

படித்து பின்னர் பணி புரிந்து – சிகாகோவில் உயர்கல்வி

சிறப்புடனே அதை முடித்து ஒமாஹாவில் பணிதொடரும்

மின்னல் மழை மோகினி அவள் பெயர்தான் ரூபிணி – அவள்

அப்பாவைப் பார்க்கப்போனோம் – அடையாறில் அடைமழை – அவளை

அமெரிக்காவில் பார்க்கப்போனோம், ஓமாஹாவில் ஒரே மழை – அவள்

ஆட்டவாக்கு அழைத்து வந்தாள் – மேகமூட்ட மிதமழை

மெல்ல மெல்ல வந்து எங்கள் உள்ளத்தில் அவள் நுழைந்தாள்

செல்லச் சொல்லு சொல்லி சொல்லி சிந்தனையில் அவள் நிறைந்தாள்

பெண் மகவு இல்லாத எங்கள் குறை அவள் தீர்த்தாள் – அவளைப்

பெற்றெடுத்த தாய்தந்தை பெருமை பெற நடந்து கொண்டாள்

எந்த ஊரு போனாலும் எங்கு வாழ்க்கை அமைந்தாலும்

எங்க அன்பும் ஆசியும் எம்பெருமான் திருவருளும்

என்றும் உனக்கு கிடைக்கும் அம்மா, என்றென்றும் நிலைக்கும் அம்மா.

அன்புடன் முருகானந்தன்

Summer visit to Charlotte, North Carolina, USA

இனிய இரண்டு நாட்கள் ஈஷானுடன்…

DSC00817

Welcome to the summer picnic – 2014

 

               சோலை விழா – 2014

வாங்க வாங்க பூங்காவுக்கு வாங்க – ஆட்டவா

ஆண்ட்ரு ஹேடன் பார்க்குக்தான் வாங்க

ஆத்துக் கரையில் காத்துவாங்க, வாங்க – அங்கே

ஆடி ஓடி விளையாடலாம் வாங்க

கூட்டாஞ்சோறு கூடித் தின்போம் வாங்க – அங்கே

பங்குஉணவு பகிர்ந்து தின்போம் வாங்க

புது நட்பு கிடைத்திடுமே வாங்க – உங்க

பழைய நட்பை புதுப்பிக்கத்தான் வாங்க

இனிப்பு, காரம், காப்பி உண்டு வாங்க – மேலும்

கேலி, கிண்டல் நிறைய உண்டு வாங்க

வாங்க வாங்க பூங்காவுக்கு வாங்க – ஆட்டவா

ஆண்ட்ரு ஹேடன் பார்க்குக்தான் வாங்க

 

Nupur School of Dance – this year

போன வாரம் இதே தினம்

இளவேனில் மாலை நேரம்

கார்ல்டன் பல்கலைக் கழகம் 

கைலாஷ் மித்தல் கலை அரங்கம்

நூபூர் நடனப் பள்ளி நிகழ்ச்சி 

3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி 

பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை 

ஆடி அபிநயித்து அலங்கரித்த மேடை 

கந்தர்வலோகத்தைக் கண்முன்னே கொண்டுவந்த காரிகைகள்

தேவலோகத்தை நேரில் காண்பித்த நேரிழைகள் 

காதை உறுத்தாத கருவி இசை

கதைக்கு மெருகு சேர்க்கும் பின்னணி திரை 

பயிற்சி தந்த ராதிகா 

பக்க பலமாக சேகர் 

தொகுத்தளித்த அனுஜா, ஷிவானி, சுப்பு 

ஆரம்பித்து வைத்த அகிலா 

நிறைவு செய்த ப்ரியா, பூர்வஜா, வினோதினி, நேஹா, ஷிவ்சா 

இடையில் வானவில்லாய்  வந்த வனிதையர் வரிசை 

அம்மி, அஷ்வினி, ஆர்த்தி, ஆர்த்திகா 

ஒரு திவ்யா, இரண்டு இஷா, ஹீர்டியா, ஹனன்யா

நந்தினி, நயோமி

ரேகா, ரிமா, ரிஷிகா, சாக்க்ஷி, சஞ்சனா, சௌம்யா  

வைஷ்ணவி, வேதிகா 

இதமான மாலை, இனிய மாலை (இலவச மாலையும் கூட…)

தொலைதூரம் புலம் பெயர்ந்தோம், ஆனால்

தொலைக்கவில்லை கலையும் கலாச்சாரமும் 

நிரூபித்த நூபூர் நடனப் பள்ளி 

நன்றி நன்றி நன்றி 

நிகழ்ச்சி பற்றி தெரிவித்த ஆட்டவா தமிழ்ச்சங்கம்

நன்றி நன்றி நன்றி 

 

என்றும் அன்புடன் ஆனந்த் (முருகானந்தன்)