Category Archives: Letters

Kalavukku Oru Kaditham

Kalaavukku oru kaditham When my sister fell ill, I wrote this to get her back on her feet again. I don’t know how much this letter helped her, but thanks to God, she is recovering now.
சீரழிக்கும் நீரிழிவு

பணக்காரர்களுக்கும், வயதானவர்களுக்கும் வரும் நோய் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்,,,
ஊரில் சிலருக்கு மட்டும் இருந்த நோய், தெருவுக்கு தெரு பரவி, இப்ப ஒவ்வொரு குடும்பத்திலும் குடி கொண்டு, கோலோச்சிக் கொண்டிருக்கிறது.

நம்மில் பலரும் மருந்து, மாத்திரை உதவியுடன் வாழ்ந்து விடலாம் என்றே எண்ணுகிறோம் – அதன் பக்க விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல்.

எங்கள் குடும்பத்தில் இதுவரை நான்கு பேரை இந்நோய்க்கு பலி கொடுத்திருக்கிறோம். நால்வரும் சக்கரைக்கு மருந்து எடுத்து, சோற்றை விட்டு சப்பாத்தி சாப்பிட்டவர்கள், இரண்டுமே விஷம் என்று அறியாமல்.

இந்நோயின் உச்சத்தில், சிதைந்து போன என் அக்காவுக்கு நான் எழுதிய கடிதம் >>>>

அன்புள்ள கலாவுக்கு,

முருகன் எழுதும் மடல். இங்கு நான், லதா, மனு, சிபி அனைவரும் நலம். நீயும் மாமாவும் இன்னும் பல ஆண்டுகள் எங்களுக்காக இந்தியாவில் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

கொஞ்ச நாட்களாவே, ஏன் கொஞ்ச ஆண்டுகளாவே அடிக்கடி நாம் அனைவரும் பிறந்து வளர்ந்த நிகழ்ச்சிகள் மனக்கண் முன் தொடர்ந்து வருகின்றன.
சஷ்டி கவசம் சொல்லும் அம்மா, நெற்றி நிறைய விபூதி பூசும் அப்பா, குமுதம், கல்கண்டு நமக்கு அறிமுகப்படுத்திய மாமா, கல்லப்பர் கோவிலுக்கு குதிரை வண்டியில் கூட்டத்தோடு போகும் அனுபவம்,

கூட்டாஞ்சோறு , நம்ம வீட்டு குத்து விளக்கு, பட்டாசாலை, லக்ஷ்மி மாடு, பெத்த அஞ்சு பத்தாது என்று தத்து எடுத்த நம் உதை வாங்கும் உதயன், உன் தோழிகள் பிரேமா அக்கா, மணிமேகலை, மாவாட்டி கொண்டே சினிமா கதை சொல்லும் சரோஜா அக்கா, புருஷனிடம் அடிக்கடிஅடி வாங்கும் அங்குலக்ஷ்மி அக்கா, வட்டிக்கு பணம் கொடுக்கும் சீதா அக்கா,
ஆரியபவன் காபி, ஆயிரம் முறை சாப்பிட்டாலும் அலுக்காத நம் ஊர் பிரியாணி, அனைவருக்கும் அருள் புரியும் அபிராமி, அக்கா தங்கை நீங்கள் படித்த கான்வென்ட் ஸ்கூல்,
மாரகழிக்குளிரில் தண்ணீர் ஊற்ற போவோமே கோட்டை மாரி
நம்ம அய்யா, அம்மாச்சி, எப்போதாவது வந்து போகும் ரயில்வே பெரியம்மா – இப்படி ஏராளமான சிந்தனைகள் என் மனதில்.

கூடப்பிறந்த உங்களை பற்றி அடிக்கடி நினைப்பேன். உன்னை பற்றி மிக அதிகமாகவே புலம்புவேன். உனக்கும் தெரியும், எனக்கும் தெரியும் – நீ கஷ்டப்படுகிறாய் என்பதற்காகவே அப்பா உன்மேல் அதிக அன்பு வைத்திருத்தார் என்று.

உனக்கு நினைவிருக்கிறதா – அய்யா நமக்கு வைத்த பட்ட பெயர்கள்.
ஆணவ ஜமுனா, அதிகார கலா, அழகு தமிழி, அறிவு முருகன், அனாவசிய உமா.

நம் வீட்டிலேயே உடல் அளவிலும் சேரி, மனதளவிலும் சரி, நீதானே தைரியசாலி. குழாய்ச்சண்டையில் கொடிகட்டி பறப்பாயே
மறந்து uவிட்டாயா?
“சாப்பாடே இல்லாவிட்டாலும் பரவாஇல்லை எனக்கு சினிமாக்கு போகணும்”, என்று மாமாவுடன் மல்லுக்கு நிற்பாயே.
நம் மாட்டுக்கு புல்லும் சுமந்தாய், நம் வீட்டுக்கு விறகும் சுமந்தாய். எங்கே தொலைத்தாய் அந்த தைரியத்தை?

அம்மாவுக்கு பிறகு சுவையான சாப்பாடு உன் வீட்டில்தானே கிடைக்கும். எந்த அத்தை வீட்டில் நல்ல அசைவச்சாபாடு கிடைக்கும்
என்று மனு, சிபி எப்பொழுதும் என்னைக் கேட்பார்கள். கலா அத்தை வீட்டில் மட்டும் தானடா நீங்கள் விரும்பும் சாப்பாடு கிடைக்கும் என்பேன்.

எங்களுக்காகவாவது நீ உன்னை கவனித்துகொள்ள வேண்டாமா?
மறுபடியும் சுறுசுறுப்பாக நடமாட வேண்டாமா?
வரிந்து கட்டிக்கொண்டு என் மனைவியோடு நீ நாத்தனார் சண்டை போட வேண்டாமா?
வாயாடி கலாவோடு என் பேரன், பேத்திகள் வாயாட வேண்டாமா?
நம் அப்பாவிடம் இருந்த போராடும் குணம் உன்னிடமும் இருக்கவேன்டாமா?
சக்கரை நோய் உலகம் முழுவதும் தானே இருக்கிறது. அதற்காக பயந்து வாழ்க்கையையே சுருக்கிக்கொள்வதா?

நிறைய காய்கறிகள் சாப்பிடு. அரிசிக்குப்பதில் கம்பு, கேழ்வரகு, சோளம் சாப்பிடு. முடிந்தமட்டும் நட. வெளியே போகமுடியாவிட்டால் வீட்டுக்குள்ளயே நட.

நடந்து நடந்தே சக்கரையை 120 -130 க்கு கொண்டு வந்து விடலாம். மூன்று வேளைக்குப்பதில், ஆறுவேளை சாப்பிடு –
ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து சாப்பிடு.

சுந்தர காண்டம் படி அல்லது கேள். நளசரிதம் படி அல்லது கேள். ஸ்ரீ ராமஜயம் எழுது. நிறைய புத்தகம் படி.

எங்களுக்கெல்லாம் கடிதம் எழுது. நம் சகோதரிகளிடம் தொலைபேசியில் பேசு. கோவிலுக்குப் போ. கடைகளுக்குப் போ. உன் பழைய நண்பிகள்
வீட்டுக்குப் போ. புது நண்பிகள் இருந்தால் அங்கயும் போய் வா. ரேடியோ கேள். டிவி பார், அடுத்து வீட்டு பெண்களுடன் அரட்டை அடி. மறுபடியும் பல்லாங்குழி ஆடு. மாமாவை சீட்டு விளையாட்டில் தோற்கடி. மாரியம்மனுக்கு மாவிளக்கு போடு. மெட்ராஸ் போய் எல்லோருடனும் கொஞ்ச நாட்கள் இருந்துட்டு வா.
நீ மட்டும் சரி என்று சொல் – ஜூலை, ஆகஸ்டில் கனடா வர ஏற்பாடு செய்கிறேன். அம்மா, அப்பா ஆசைப்பட்டபடி உன் தம்பி வசதியாக வாழ்வதை எங்களுடன் இருந்து ரசி. என் மகன்களுக்கும், மனைவிக்கும் திண்டுக்கல் சாப்பாடு சமைக்க கற்றுக்கொடு.

பாவக்காய், பலகீரை, பாசிப்பருப்பு, பச்சமொச்சை வாரம் இருமுறையாவது சாப்பிடு. ஒருகை அளவு அரிசி, இருகை அளவு பருப்பு, நான்குகை அளவு காய்கறி எல்லாம் போட்டு கிச்சடி செய்து தினமும் சாப்பிடு.

“இனிமேல் தான் எனக்கு வாழ்க்கை ஆராம்பிக்கிறது” என்று நினைத்துக்கொள் அல்லது மறுஜன்மம் எடுத்ததாக எண்ணிக்கொள். உலகம் நமக்காக கடைவிரித்திருக்கும் அவ்வளவு இன்பங்களையும் அனுபவிப்பேன் என்று சபதம் செய். வாழ்வது ஒன்றை மட்டும் நினை, பேசு, கனவு காண். நிமிர்ந்து நில். நெஞ்சு நிறைய சந்தோசத்துடன் இருக்கப் பழகு.

உத்தமப் பெற்றோருக்குப் பிறந்தாய், உனக்குப் பிடித்த தாய்மாமனையே மணந்தாய், ஆணொன்று பெண் ஒன்று பெற்றாய். அவர்களை அளவில்லா செல்லம் குடுத்து அருமையாய் வளர்த்தாய். மகனுக்கு மேலான மருமகன், புதிதாக மருமகள், பேரன், பேத்தி, இருக்க வீடு, இனிமையான நினைவுகள்
இத்தனையும் கொடுத்திருக்கிறானே இறைவன். இன்னும் என்ன குறை உனக்கு?

நீ ஒத்தையாகப் பிறக்கவில்லை ஐந்து பேருக்கு உடன் பிறந்தாய். நீ தனியாக இல்லை. உன் தம்பி இருக்கிறேன். அப்பா ஒரு ஆலமரமாக வாழ்ந்தார். அவர்மகன் மாறுபட்டோ, மாசுபட்டோ விடவில்லை. என்னால் கோடிக் கோடி ஆக கொட்டி கொடுக்க முடியாது. கூடவந்து உன் அருகில் இருக்கவும் முடியாது. அனால் நீ திரும்பவும் பழைய கலாவாக மாற நான் என்ன செய்ய
வேண்டும் அன்று சொல்.கட்டாயம் செய்வேன். அசட்டுக் கலாவாக இருக்காதே. அதிகார கலாவாகவே என்றும் இரு.

உன் தம்பி

முருகானந்தன்

Advertisements