Category Archives: Vimarsanam

Ottawa Tamil Sangam – October 2018

ஐப்பசி அதிரடி

பார்த்து, பங்கு கொண்ட நிகழ்ச்சியைப் பற்றி எழுதுவது சுலபம்,,
போகாமலேயே நம் தமிழ்ச்சங்கத்தின் விளக்குத் திருவிழா, தீப ஒளித்திருவிழா பற்றி,,,,

கனிவுடன் (காசு வாங்கிக்கொண்டு  ) வாங்க வாங்கவெனச் சொல்லும் வரவேற்புக் குழுவினர்,

கல கலவெனச் சிரிப்பைச் சிந்தும் சிறார்கள்,

பூவும் பட்டும் பொட்டுமாக நம் குலப் பெண்கள்,

நுனிநாக்கில் ஆங்கிலம் இருந்தாலும், நினைவெல்லாம் தமிழாக நம் ஆண்கள்,

தமிழ்த்தாய் வாழ்த்து, முதல்வனுக்கு மரியாதை,

அடுக்கு மல்லியாக அடுத்தடுத்து ஆட்டம், பாட்டம், நடனம், நாடகம், வித்தை, விவாதம், சிரிப்பு, கூத்து, கும்மாளம்,

இடையே வயிற்றுக்கும் கொஞ்சம் தீனி, பானம்,

தொடர்ந்து துள்ளல், கலக்கல், அமர்க்களம், ஆர்ப்பாட்டம்,

வயிறு நிறைய சுவையான உணவு, மனது நிறைய உபசரிப்பு,,,

மொத்தத்தில் ,,,,

தவழ்ந்து கொண்டிருந்த தமிழ்ச்சங்கம், தளிர் நடை நடந்து, தாவிக் குதிப்பதைக்கண்டு மிக மிக மகிழ்ச்சி…

மேலும் வளர வாழ்த்துக்கள்

அறிஞர்களையும், கலைஞர்களையும் நம் ஊருக்கும் வரவேற்று அடுத்த இலக்கு நோக்கி நகர வேண்டும் என்ற கோரிக்கையுடன்

ஆனந்த் (முருகானந்தன்)

Advertisements

96 Movie

96

நாய்க்குட்டி விட்டுவிட்டு நான்எங்கும் வரமாட்டேன் என்றவனை,
என்னவள் கட்டாயப்படுத்தி கூட்டிச்சென்ற படம் 96

சலங்கை ஒலிக்குப் பிறகு என்னை சலனப்படுத்தி, சஞ்சலப் படுத்தி, என்மனதில் சூறாவளி ஏற்படுத்திய காதல் காவியம்.

காதலின் சுகத்தையும், சுகந்தத்தையும், சோகத்தையும்,
மெல்லிய அதிர்வுகளையும், ஏக்கத்தையும்,
தாகத்தையும், தாபத்தையும், தயக்கத்தையும், தடுமாற்றத்தையும், தடமாற்றத்தயும், தவறான புரிதல்களையும்,
காட்சிக்கு காட்சி நம்மேல் அள்ளித்தெளிக்கும் படம் 96

கற்பனைக்காதல் என்னைஎன்ன செய்யும் என்று நினைத்தேன்.
காதல் எதுவும் செய்யும் என்று புரிந்துகொண்டேன்.
கைகூடாக்காதலின் வலி நெஞ்சில் பாறையாய் கனக்கிறது – இன்னும்.

ராம் என்கிற ராமச்சந்திரனாக விஜய் சேதுபதி,
ஜானு என்கிற ஜானகியாக த்ரிஷா,
படம் முழுக்க வியாபித்திருக்கிறார்கள், விசுவரூபம் எடுத்திருக்கிறார்கள்,

சின்ன வயசு ஜானகி, ராமச்சந்திரனாக கௌரியும், ஆதித்யாவும் அசத்தியிருக்கிறார்கள்.

கலகலப்புக்கு தேவதர்ஷினி, அவர் மகள் நியாதி ஜானுவுக்கு தோழியாக ஜமாய்திருக்கிறார்கள்.

சிரிக்க வைக்க பகவதி பெருமாள், ஆடுகளம் முருகதாஸ்.

குறைவான நேரமே வந்தாலும் நிறைவாக நடித்திருக்கும் ஜனகராஜ், கவிதாலயா கிருஷ்ணன்.

படம் முழுக்க காதை உறுத்தாத இசை, கவிதை மழை,
இளகிய மனங்கள், ஈரச்சாலைகள்.

பயணக்கட்டுரை புகைப்படக்கலைஞராக விஜய் சேதுபதி ஊர் ஊராக (நாடு நாடாக) நம்மையும் இழுத்துச் செல்கிறார்.
தஞ்சையில் தான் படித்த பள்ளிக்குள் செல்லும்போது பழைய நினைவுகளில் ஆழ்ந்து, 1996க்கு கூட்டிச் செல்கிறார்.
கள்ளமில்லா பள்ளிக்காதலை புதிய பரிமாணத்துடன் படைத்திருக்கிறார் இயக்குனர் பிரேம்குமார். (இவருக்கு இது முதல் படம்)

பிரிவுக்கு முன்பும் பின்பும் முத்தமில்லை, சத்தமில்லை, கட்டிப்பிடிக்கவில்லை, காதலியை யாரும் கடத்தவில்லை,
யாரும் யாரோடும் ஓடவில்லை, தடுக்கவில்லை,
வெட்டில்லை, குத்தில்லை – மாறாக

அன்பு, பாசம், காதல், நட்பு கலந்த மெல்லிய உணர்வுகள் தென்றலாக வீசுகின்றன, நம்மைத் தொட்டுத்தடவி தாலாட்டிச் செல்கின்றன,
சேதி ஒன்றை சொல்கின்றன – “காதல் அழிவதில்லை, தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும்” என்று.

கன்னத்தில் குழிவிழ, கண்களாலும் சிரிக்கும் ஜானுவைக் கண்டால் எந்தப் பையனுக்குதான் காதல் வராது? ராம் ஈர்க்கப்பட்டது இயல்புதானே,

உள்ளம் சொல்வதை உதடுகள் சொல்லவில்லை – விளைவு?
படத்தை பார்த்துவிட்டு நீங்களே சொல்லுங்கள்.

22 ஆண்டுகளுக்குப் பின், பிரிந்த பள்ளித் தோழர், தோழியர் மீண்டும் சந்திக்கின்றனர். பாசமும், பரிகாசமும் அலை அலையாக எழும்பி நம்மீதும் கொஞ்சம் தெறிக்கிறது.

ஜானுவும் (த்ரிஷா) வருகிறாள்…

வந்த நொடி முதல் விடைபெறும் வினாடி வரை பத்தோடு பதினொன்றாக பாதிஉடை அணிந்து ஆடமட்டும் வரும் அழகுபொம்மை தானில்லை என்று நிரூபித்திருக்கிறார்.
பார்வையில், பேச்சில், நடையில், நடத்தையில் கனிவையும், கண்ணியத்தையும் கலந்து கொட்டியிருக்கிறார்.
வரம்பு மீறாக் காதலை வரைந்து காட்டிச்சென்றார்

என்ன நடந்தது, ஏன் நடந்தது, எப்படி நடந்தது என்று ஒவ்வொரு முடிச்சாக திரையில் அவிழ அவிழ, நம் இதய நாளங்கள் முறுக்கிக்கொள்கின்றன, கண்கள் குளமாகின்றன.

த்ரிஷா “நான் உன்னைப் பார்க்கலடா”ன்னு சொல்லி குளிலறைக்குக்குள் ஓடி குமுறிக்குமுறி அழுகையில், நமக்குள்ளும் எதோ ஒன்று உடைந்து சிதறுவதை உணர முடியும்.

நெகிழ வைக்கும் தருணங்கள், நெஞ்சை உருக வைக்கும், உறைய வைக்கும்.
அவள் பசி என்றவுடன் அவன் உணவு கொண்டு வருவது, அவன் பசிக்கு அவள் சமைத்து தருவது, “எங்க இருக்க ராம்” என்ற கேள்விக்கு “நீ என்னை எங்கே விட்டுச் சென்றாயோ, அங்கேயேதான்” என்று இரு பொருள்பட சொல்வது.
அவனுக்குப் பிடித்த பாடலை அவனுக்காக, அவனுக்காக மட்டும் அரை இருட்டில் பாடுவது.

படம் முடிந்த பின்பும் அரங்கை விட்டு அகல எனக்கு மனமில்லை.
மூன்று நாட்களாக உறக்கமில்லை. இந்தப்பிறப்பில் கொடுப்பினை இல்லை.
அடுத்த பிறப்பிலாவது காதலிக்கவேண்டும்

அதுவரை காத்திருக்கும் ஆனந்த்.

96

Pongal Vizhaa 2018

ஆட்டவா தமிழ்ச்சங்கம் 

பொங்கல் விழா – ஜனவரி 13, 2018

இதற்குத்தானே ஆசைப்பட்டேன்

சொன்ன நேரத்துக்கு முன்பே சென்றேன். ஆண்டு உறுப்பினர் கட்டணம், நுழைவுக்கட்டணம் செலுத்தி உள்ளே சென்றேன். அலங்காரப் பொங்கல் பானையை ஆசையுடன் பார்த்தேன். அணங்குகள் அங்கும் இங்கும் அலைந்து அலங்கரிக்கும் பணி கண்டேன்.
தெரிந்த, தெரியாதவர்களுடன் சிறுபேச்சு,
அனிதா, வருண், செந்தில், சாந்தி அறிமுகம்,
ஆர்த்தி கணேஷ் புகைப்படம்,
தாமதமாக ஆரம்பம்,
மிக மிகத் தாமதமான ஆரம்பம்,
தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவக்கம்,
பாரம்பரிய பரதம்,
இறை வணக்கம்,
இயற்கைக்கு வணக்கம்,
இயல், இசை, நாடகம்,
பொங்கல் விளக்கம்,
ஆட்டமும் பாட்டுமாக அடுத்தடுத்து அமர்க்களம்,
சிரிக்கவும் சிந்திக்கவும் இறுதியில் ஒரு பட்டிமன்றம்,
ராஜேஷ், காஷ்யப் – தொய்வில்லா தொகுத்தளிப்பு
கொட்டிய பனி, கடுங்குளிர், மற்ற நிகழ்ச்சி,
மீறித்திரண்ட தமிழர் கூட்டம்,  துணைக்குத் தென்னிந்தியர்கள்,
சங்கத்தின் சரித்திரத்தில் திருப்புமுனையாக,
ஆட்டவா மேதகு மேயர், நேப்பியன் கௌன்சிலர்,   இந்தியா தூதரக அதிகாரி,
இவர்களின் வருகை,
முடிவாக பசித்த வயிறுக்கு வாழை இலையில் சாப்பாடு,

இதற்குத்தானே ஆசைப்பட்டேன்,,,
இனிவரும் ஒவ்வொரு   நிகழ்ச்சியும்
இதைவிட வெற்றிபெற வாழ்த்தும்

உங்கள் நண்பன் முருகானந்தன் (ஆனந்த்)

 

Shreya Arangetram – June 27th, 2015

Dear friends and relatives,
June 27th – two events on the same day. Our college reunion in New Jersey and Shreya’s Arangetram in Missouri. கலை கல்லூரியை பின்தள்ளி விட்டது. I ended up changing my ticket to St.Louis and it was worth it.

நினைவை விட்டு நீங்கவில்லை, நெஞ்சை விட்டு அகலவில்லை

மாதம் ஒன்று ஓடியும் மனதை விட்டு மறையவில்லை
நினைவை விட்டு நீங்கவில்லை, நெஞ்சை விட்டு அகலவில்லை
ஆனந்த்(சுதா) மகள் அரங்கேற்றம்
நினைவை விட்டு நீங்கவில்லை, நெஞ்சை விட்டு அகலவில்லை
ஷ்ரேயாஉன்   ஆடை, அணி, அலங்காரம்,
நினைவை விட்டு நீங்கவில்லை, நெஞ்சை விட்டு அகலவில்லை
அடவுகளின் அணிவரிசை
நினைவை விட்டு நீங்கவில்லை, நெஞ்சை விட்டு அகலவில்லை
முத்திரைகள் சித்திரமாய்
மனதை விட்டு மறையவில்லை மனத்திரையில் மங்கவில்லை
கண்ணசைவு, கைஅசைவு கணக்கான காலசைவு
கண்ணைவிட்டு மறையவில்லை கருத்தைவிட்டு விலகவில்லை
இறைக்கும், சபைக்கும் புஷ்பாஞ்சலி
மோதகப் பிரியன் பாடலுக்கு முதல் ஆடல்
கன்னியை நோக வைத்த கண்ணனிடம் நீ கேட்ட நியாயம்
எங்களுக்கும் வந்ததம்மா மனதோரம் கோபம்
கொள்ளிடம், காவிரி,  இடையுறங்கும்  ரங்கநாதா
பள்ளிகொண்ட காரணத்தை சொல்லும்மையா என்று நீ
கேள்விமேல் கேள்விகேட்டு, கேள்விக்கு பதிலும் சொல்லி
பக்தியுடன் பரவசத்தை பதத்தில் தந்தாய் தத்ரூபம்
ஆடற்கலை இலக்கணத்தை அனைவருமே அறியுமுன்னர்
ஆண்டாளாய் அவதரித்து ஆட்டத்தை முடித்துக்கொண்டாய்
குழலைக் கொண்டையாக்கி, குடை ஜிமிக்கி காதிலாட
கனாக் கண்டகோதையை கண்முன்னே கொண்டுவந்தாய்
வியப்பு, வெறுப்பு, விரகம், வீரம்,கனிவு, காதல், கம்பீரம்,
பக்தி, பயம் பரவசம், தவிப்பு, தாகம் – அனைத்தும் தந்தாய்
செங்குழம்பு தீட்டிய செந்தாமரைப் பாதங்கள்
தாங்கும் தரையை தட்டித் தடவி எழுப்பிய சத்தம் சங்கீதம்
நீளப்பொட்டு, நெற்றிச்சூடி, கைவளை, காதணி, காற்சதங்கை
மாட்டி, மாலை, ஒட்டியாணம், பின்னல், பில்லாக்கு
மாதம் ஒன்று ஓடியும் மனதை விட்டு மறையவில்லை
நினைவை விட்டு நீங்கவில்லை, நெஞ்சை விட்டு அகலவில்லை
ஸ்மிதா ராஜன் சொன்னது போல், இது தொடக்கம்தான், முடிவல்ல
மறுபடியும் உன்னை மேடையில் காண விரும்பும் முருகானந்தன்
…..நிகிதாவுடன்…..☺

Sanjana Sundar

சஞ்சனா சுந்தர் – அரங்கேற்றம்

ஆட்டவா தமிழ்ச்சங்கத்தின் வருடாந்திர கலைநிகழ்ச்சி இன்று. போகமுடியவில்லை. கொஞ்சம் வருத்தம். வரப்பிரசாதமாய் வந்தது வலைத்தள இணைப்பு
சஞ்சனா சுந்தரின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியின் காணொளிப்பதிவு.
கண்கொள்ளா காட்சிகள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு,
அடவுகளின் அணிவகுப்பு,
இசையும் நடனமும் இணைந்து தந்த விருந்து.
பாட்டும் பரதமும் என் வருத்தத்தை மாற்றிய  அருமருந்து.

பிரியங்கா (அக்கா)வின் அபிநயம் கலந்த அருமையான தொகுப்பு, பிசிறில்லா பிழையில்லா பரிசளிப்பு.

விளையும் பயிர் முளையிலேயே தெரியும். தெரிந்தது பல வருடங்களுக்கு முன்பு – ஆட்டவா தமிழ்ச்சங்க மேடையில்.
நிரூபணமானது நேற்று. என் உள்ளம் அறிந்தது உறுதியானது.

கடவுளின் கருணை, அம்மா அப்பா அன்பு, ஆதரவு, தாத்தா, பாட்டி ஆசீர்வாதம், குருவின் கிருபை – அனைத்துக்கும் மேலாக, சஞ்சனாவின் பகீரத பிரயத்தனம்.

விதைத்தது இருவர். விளைச்சலின் பயன் நம் அனைவருக்கும்.

சரிந்து அமர்ந்த என்னை நிமிர வைத்த “சப்தம்”
நிமிர்ந்து அமர்ந்த என்னை நிற்க வைத்த “வர்ணம்”

தில்லைநாதனுக்கு முதல் மரியாதை – அவன் பெற்ற
தகப்பன் சுவாமிக்கு தனி மரியாதை

சஞ்சனா – சப்தத்தில் சிற்றாறு – வர்ணத்தில் ஆடிப்பெருக்கு
விழிகளாலும் விரல்களாலும் நீ போட்ட பல கணக்கு
சொல்லிகொடுத்த ரோஹிணிக்கு எங்கள் பாராட்டு

குழல்வாரி பின்னலிட்டு பூச்சூடி, திலகமிட்டு காத்திருந்த சஞ்சனா
காலைமுதல் இரவுவரை உன்னைக் காக்கவைத்த கந்தனுக்கு
தமிழ்க்கடவுள் என்ற பெயர் சரிதானா – அவன் செயல்தான் முறைதானா

சொல்லடி, மனம் கல்லோடி?
விதவிதமாய் அபிநயத்து கெஞ்சலும் கொஞ்சலுமாய் நீகேட்ட பின்னாலே,
வந்திருக்கவேண்டுமே குமரன் அவன் ஓடோடி
நெஞ்சழுத்தக்காரனோ பழனியாண்டி?

அம்மா பாடல், அழகுமகள் ஆடல்
சாந்த சொரூப வாமன, ரௌத்ர மூர்த்தி நரசிம்மா,
மிச்ச அவதாரம் எப்பம்மா, சீக்கிரம் சொல்லு சஞ்சனா

கன்னல் கைபிடித்த ராஜ ராஜ ராஜேஸ்வரி
கண்கள் கலங்க வைத்தாய் காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி
கருணை கலந்த கம்பீரம் – தத்ரூபம், அற்புதம்

சிறப்புப் பரிசாக தீராத விளையாட்டுப் பிள்ளை – பாடிய
சங்கல்ப் என்றென்றும் ஆட்டவாவின் செல்லப்பிள்ளை

பார்த்தேன், ரசித்தேன், கண்டேன், களித்தேன் –
நான் தவற விட்டது ஒன்றுதான் –
நிகழ்ச்சிக்குப்பின் நீங்கள் தந்த விருந்து

Pisaasu – movie

“பிசாசு” படம் பார்த்தேன்

ஆவி பிடித்த அபார்ட்மெண்ட் எனக்கு ரொம்பப் பிடித்தது.
ஆவி விரட்டவந்த அமலா பட்டபாடு சிரிக்க வைத்தது.
ஒரேயொரு பாடல் உள்ளத்தை நெகிழ வைத்தது.
ஒருவார்த்தை கூட பேசாத அழகு முகம் நினைவில் நின்றது.
பின்னணி இசை நெஞ்சத்தை பிழிந்தது
போனில் பொய்சொல்லி மாட்டும், பேயால் தள்ளப்படும், பக்கபலமாய், பக்கத்துக்கு ஒன்றாக நண்பர்கள்,
களவாடப்போய் கத்திக்குத்து வாங்கும் பித்தலாட்டக்கார பிளாட்டோ, புகையும் குடியும் வேண்டாம் என்று தடுக்கும் பிசாசு பிரயாகா, ஆஹா, ஊருக்கு பத்து பேய்கள் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும்.
கார் ஓட்டும்போது கவனம் தேவை என்று சொல்லாமல் சொல்லிருக்காங்க – நேர்த்தியாக, நிறைவாக, நினைவில் நிற்கும்படியாக …அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்.
இசை அமைத்த ஆரோல் கரோலிக்கு பிரத்தியேகமான பாராட்டுகள்.
நண்பனாக வரும் என் அக்காமகன் அஷ்வத்துக்கு (விஜய்) என் அன்பு நிறைந்த ஆசிகள்.
பிசாசு பார்க்க பயந்துகொண்டிருந்த என்னை, பார்க்கச் சொல்லி ஊக்கம் கொடுத்த ரூபிணிக்கு நன்றிகள்.

ஆட்டவா ஒரு தூங்குமூஞ்சி தலைநகரமா?

ஆட்டவா ஒரு தூங்குமூஞ்சி தலைநகரமாக முன்பு இருந்திருக்கலாம், இப்ப இல்லை, இனி இருக்காது என்று தான் நினைக்கிறேன். At least not on the East Indian arts and culture front.

ஆடியில் அமர்க்களமாக நடந்த மூன்று நாள் இந்தியத் திருவிழா (Festival of India).

அதன் பின் ஆட்டவா தமிழ் முதியோர் கழகமும்(OTSA) தேசியத் தலைநகர தமிழ்ச்சங்கமும் (NCRTA) சேர்ந்து நடத்திய இசைக்கவி ரமணரின் “வாழ்க்கையே கவிதையாக” எழுதி, இசைபட பாடிய நிகழ்ச்சி.

இரு பெருநகர்களுக்கிடையே (டொரோண்டோ, மாண்ட்ரியல்) அகப்பட்டுக்கொண்ட சிறுநகர் நம்ம ஊர் – ஆட்டவா. நம்மையும் மதித்து மின்னல் போல் வந்து, வாழ்க்கைக்கும் வாழ்தலுக்கும் வித்தியாசம் விளங்கவைத்து, அலைச்சல், தேடல், பயணம் – இவற்றின் பொருள், வேறுபாடு  உணர்த்தி, பராசக்திக்கே ஆணையிட்ட பாரதியை நினைவுறுத்தி, மருதாணி வைத்து பையப்பைய படி இறங்கிய பெண்ணை எம் கண்முன் நிறுத்தி, தமிழ், தமிழ், தமிழ் அமிழ்தஅமிழ்தஅமிழ்து என போரப்பரணி பாடி எங்கள் அனைவரையும் எங்கோ அழைத்துச்சென்ற இசைக்கவி ரமணருக்கு நன்றி – மறுபடியும் எப்போ வருவார் என்று காத்திருப்பவர்களில் நானும் ஒருவன்.

இந்தியாவில் இருந்து வரும் கலைஞர்களின் நிகழ்ச்சிகளை தனியாக முடியாவிட்டாலும் இதர சங்கங்களுடன் சேர்ந்து நடத்த நாம் முன்வர வேண்டும்.

பிறகு, Sweet September என்று சும்மாவா சொன்னார்கள்? மாதத்தின் முதல் வார இறுதியில் ஆட்டவா தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நடன நிகழ்ச்சி.

காற்சதங்கை கிணுகிணுக்க காதணிகள் மினுமினுக்க

கயல்விழிகள் கதைசொல்ல கைவிரல்கள் அபிநயிக்க

பாரதத்தின் நடனவகை பலவற்றில் சிலவற்றை

பாங்குடனே படைத்தனரே.

கலைவாணி அருளாலே நம் கலைவானில் புதிதாக

தாரகையாய் வந்தாரே தாரா கிருஷ்ணன்.

இரண்டு வாரம் முடியவில்லை, இன்னுமொரு இனிய நிகழ்ச்சி

சிவாவும்நண்பர்களும், சென்னை ரிதம்குழுவினரும் சேர்ந்தளித்த சினிமியூசிக் 2013.

நான்காம் ஆண்டாக நமக்களித்த இசைவிருந்து

புரட்டாசி பிறந்ததோ இல்லையோ, அடை மழையுடன் கூடிய இசை மழை கொட்டியது கார்ல்டன் பல்கலைக்கழக கைலாஷ் மித்தல் அரங்கில் செப்டம்பர் 21 அன்று.

அரங்கு நிறைந்த ஆனந்த வைபவம்

பச்சைப் புடவையில் பாரதி கண்ட புதுமைப்பெண்

பார்த்தால் சிற்றாறு பேசினால் கரைபுரண்டோடும் காட்டாறு

மறுபடியும் கேட்கிறேன் – அடி அம்மாடி

எங்கிருந்து வந்தாள் அந்த அஷ்வினி ஹெம்மாடி?

மொத்த நிகழ்ச்சியையும் முத்து முத்து ஆங்கிலத்தில்

தொய்வில்லாமல் தொகுத்தளித்த கன்னடத்து கில்லாடி!

ஒவ்வொரு பாடலும் YouTubeல் எத்தனை hit என்ற தகவல் – புது உத்தி – சபாஷ் !!!

ஒற்றைச் சுழியிட்டாலே  உதவிடுவார் பிள்ளையார்

இரட்டை துதி பாடின், நிச்சயம் வெற்றி தானே – சப்தவி, சந்தியா, தேபாசிஷ்

அந்த சிவன் கையில் பிரபஞ்சத்தை உருவாக்கிய உடுக்கை

நம்ம சிவா கையில் இசைப்பிரவாகம் கொட்டும் குழல்

அந்த சிவன் கழுத்தில் படமெடுக்கும் பாம்பு

இந்த சிவன்(சிவரூபன்) கழுத்தில் படம்பிடிக்கும் கருவி

ஒரு மொழியில் பாடினர் பலர்

பல மொழிகளில் பாடினர் சிலர்

இந்தியில் பாடிய சந்தியா

மாலையானால் என் மனதுக்குள் வா (kabhi sham dhale to mere dil me aa jana)

பாடி எங்கள் மனதில் இடம் பிடித்து விட்டாயம்மா

ரா ரா பாட்டுக்கு உன்னை விட்டால் யார் பொருத்தம் சப்தவி,

சொந்த மொழி, வந்த மொழி இரண்டிலுமே கலக்கிவிட்டாய் பாஸ்கரனின் கண்மணி.

“போற்றிப் பாடடி பொண்ணே” பாடிய தாஸ் மூர்த்தி

தட்டி எழுப்பும் தனித்துவம் உங்கள் குரல் கீர்த்தி

சோதிவண்ணன் பெற்றெடுத்த அமிர்தனே

நீ பாடிய பாட்டு ரெண்டும் அமுதமே

சரிந்த என்னை நிமிர வைத்த “சின்ன மணி      குயிலே” விஜய்

“வந்தாண்டா பால்காரன்” பிரதீப்

தந்தைக்கு (சாம்) தப்பாமல் பிறந்த பிரியா, ப்ரீத்தி

பெயரிலேயே சுருதி உள்ள ஷ்ருதி

“இளம் காத்து வீசுதே” அஷ்வின்

குட்டி நந்தனா, காகோலி, கிறிஸ்டினா

பாடல்களுக்கு ஏற்ப நடனம் ஆடிய பலர்

தூள் கிளப்பிய துளசிகா, கார்த்திகா, மேரி, கல்பனா

திலாக்ஷி, தாசினி, வாணி, யஸ்வினி, அர்ச்சனா

மற்றும் அறிமுகத்துக்கும் விமர்சனத்துக்கும் அப்பாற்பட்ட

லக்ஷ்மி, ராஷ்மி & ஹரி, வித்யா & மகாதேவன், சாம், சிவா

இத்தனை பேருடைய பலவருட கால படிப்பையும், பயிற்சியையும்

பத்தே பத்து டாலர் கொடுத்து மொத்த சுகத்தையும் (ஐந்து மணி நேரம்) அனுபவித்த

கொடுத்து வைத்தவர்களில் நானும் ஒருவன்.

இந்த மயக்கம் தீருமுன்னர் அக்டோபரில் அடுத்த நிகழ்ச்சியாம் – வாணி விழா

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

இப்ப சொல்லுங்கள் – நம்ம ஊர் தூங்குமூஞ்சி நகரமா?

அன்புடன் ஆனந்த் (முருகானந்தன்)

CineMusiq 2012 – Sweet September’s sweetest event

CineMusiq 2012 – Sweet September’s sweetest event

  நண்பர்களே,

நேற்று கொட்டும் மழையில் கார்ல்டன் பல்கலைகழக கைலாஷ் மித்தல் அரங்கு
அரங்கு நிரம்ப இசை ரசிகர்கள். சினிமியூசிக் 2012, ஆறு மணிக்கு ஆரம்பம்.
ஆரம்ப முதல் அருமையாக தொகுத்தளித்தார் துசி ஞானப்பிரகாசம்
பிரகாசமான விளக்கமைப்பு, பொருத்தமான ஒலிஅமைப்பு

அமைத்து, ஆக்கி, அள்ளிக் கொடுத்தனர் Flute சிவா, சென்னை ரிதம்ஸ் குழுவினர்.
கண்களுக்கு விருந்தாக பல நடனக்கலைஞர்கள்.
பரிச்சயமான பாடகர்களுடன் பல புதுப்பாடகர்கள்.
பாட்டும் இசையும் கைகோர்த்து நின்றன மேடையில்.

நமக்கு மிகவும் அறிமுகமான நம் ஆட்டவா தமிழ்ச்சங்கப் பாடகர்களைப் பற்றி
மேலும் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. They will always deliver what they are good at and they did , this time too. (வித்யா, ஸ்ரீநிவாசன், சிவா, சாம், லக்ஷ்மி, கரிஷ்மா, ப்ரீத்தி, பிரியா, ஸ்ரீனிவாசன், ஸ்வரா, பவித்ரா, ஆர்த்தி, அஷ்வினி, ஸ்ருதி)

“கண்ணே கலைமானே பாடி” கண்கலங்க வைத்தார் – விஜய் ரத்னவேல்
“காற்றின் மொழி” பேசி இதயத்தை குளிரவைத்தார் – கலக்கல் கருணா
மடை திறந்த வெள்ளம் போல “மின்சார பூவே” பாடி
அரங்கை அதிர வைத்தார் – சப்தவி பாஸ்கரன்

“மயில் போல பொண்ணு ஒன்னு” பாடி நம் கண்ணுக்குள்ளே
குடிபுகுந்த – குயில் காயத்ரி

“போறானே போறானே காத்தோட தூத்தலபோல” பாடி

நம்மை நிமிர்ந்து உட்கார வைத்த – ஹரிணி ரத்னவேல்

“கண்ணழகா, காலழகா” பாடிய – அமிர்தன், அழகு அனன்யா

அம்மாடி, எங்கிருந்து வந்தாள்? இந்த ஹெம்மாடி

தமிழ், ஹிந்தி இரண்டிலும் பாடிய அஷ்வினி, ஷிவானி

“மெஹந்தி லகா கே” கீதா பரேக்

சகோதரனுக்கு(சிவா) சளைக்கவில்லை என்று நிரூபித்த ரேணுகா

நம் பாதங்களை ஆட வைத்த (மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு) பிரதீப் மற்றும் வினோத்

அசராமல் ஆடி நம்மை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்த

அகன்ஷா, ஆர்த்தி, அஸ்வினி, ஷிவானி,

கார்த்தி, கிருத்திகா, திலாக்சி, துளசிகா,

பவித்ரா, நிகில், ஸ்ருதி, ஸ்வரா,

மனிஷா, தேபாரதி, வானதி

மொத்தத்தில், அடைமழைக்கு நடுவில் ஒரு இசைமழை

கவனிக்க வேண்டிய விஷயம் – காதை உறுத்தாத இசை

தொகுப்பாளர் துசி பேசும்போது அடக்கி வாசித்த இசைக்குழு

(Way to go, Chennai Rhythms)

சிவாவுக்கு (குழுவுக்கும்தான், சிவனில் எல்லாம்தானே அடக்கம்)

என் பாராட்டுக்கள், மேலும் மேலும் உங்கள் முயற்சிகள்

அனைத்திலும் வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள்

முருகானந்தன் (ஆனந்த்)                                  9 September, 2012

அமெரிக்காவில் ஒரு அரங்கேற்றம்

Tarrytown, NY 

09 August, 2011

இரவு மணி பன்னிரண்டடு.

ஒரு மாதம் ஓடி விட்டது. ஆர்த்தி ப்ரீத்தி அரங்கேற்றம்

நடந்து ஒரு மாதம் ஓடி விட்டது.

எண்ணத்தில் எழுந்ததை எழுத்தாக வடிக்க ஒரு மாதம் ஆகி விட்டது.

Better late  than never என்பார்கள் – எனவே இதோ என் மனம் எழுத்து வடிவில் …

ஆர்த்தி ப்ரீத்தி அரங்கேற்றம் – அபினயாவில்  பயின்று

அனைவரின் முன்னிலையில் அரங்கேற்றம்.

ஆண்டவன் அருள், அன்னை தந்தை ஊக்குவிபபு
ஆசிரியரின் அயராத பயிற்சி ஆர்த்தி ப்ரீத்தியின்
பத்து வருடப் பகீரதப் பிரயத்தனம் –
எனக்குக் கிடைத்தது ஒரு இனிய மாலைப் பொழுது

தாத்தா துரைப்பாண்டியனுக்கு பதிலாக நிறைப்பாண்டியன்

சொந்தப்பாட்டி ஸ்தானத்தில் சோச்சிப்பாட்டி

தமிழில் வாழ்த்தெழுத பாட்டி ராமலக்ஷ்மி

முன்னின்று உதவ குமார், கோபி, மின்னல் வேக லீலா

வரிந்து கட்டி வேலை செய்ய வனிதா, பர பரவென பணியாற்ற பாப்பு

வளைய வந்த வர்ஷிதா, சள சள சம்ஹிதா

சுற்றி வரும் சுத்தக்கார (சின்னப்பாட்டி வாரிசு) சுதர்சனா

புன்சிரிப்பு புனிதா பூஜா, ப்ரனவுடன் அப்பா ராஜா

ஸ்ரீதேவி அபிநயா, வெங்கடேஷு ஹரிணிஅக்கா

கல கல கல, லக லக லக லதா மணி

அன்பு, உமா, இருவர் பெற்ற அபினவ், வைஷு

தன்னைப் பெற்றவளும் தன மகளைப் பெற்றவளும்

இருபக்கம் இணைந்து வர இனிய மகளுடன்

இரண்டு மணியளவில் இளங்கோவும் வந்தாரே.

இத்தனை சம்சாரிகளுக்கிடையில் இரண்டு பிரமச்சாரிகள்

– மகேந்திரன், அருண்

நியூ ஜெர்சி மாநிலத்தில் நார்த் ப்ரன்ஸ்விக் பள்ளியிலே

நான்கு மணிமுதலே எல்லோரும் கூடினரே

புஷ்பாஞ்சலியில் கிளம்பிய புல்லெட் ட்ரெயின்

மங்களத்தில் தானே வந்து நின்றது.

தாய்தந்தை தங்கைதம்பி தங்கநிகர் பாச வளையம்

தனக்கென்று அதற்குள்ளே தனியாக ஒரு உலகம்

இருகுதிரை தனக்கு வாங்கி எனக்குஒன்று தருவேன் என்றாள்

ஒருநாள் தொடங்கப்போகும், உணவகத்தில் எனக்கு மட்டும்

உணவு என்றும்  இலவசம் என்றாள் – தான்கண்ட கனவுகளில்

இந்த மாமனுக்கும் பங்கு தந்த பாசக்கார ப்ரீத்தி இன்று

காலில் சதங்கை கட்டி கண்ணில் மை தீட்டி நீளத்திலகமிட்டு

சின்னக்கண்ணன் என்னசெய்தான் தெரியுமா பாட்டுக்கு

பின்னல் பிறகசைய கண்ணாலும் கையாளும் கதைதான் சொல்கின்றாள்

சுவரிலே கிறுக்காதே என்று சொல்லி நான் துரத்த

சுற்றி சுற்றி ஓட்டம் காட்டி சறுக்கி எனை விழவைத்த

சுட்டிப்பெண் சின்னப்பெண் சித்திரமாய் வளர்ந்துஇன்று

சிருங்காரம், சினம், சிரிப்பு

பயம், வீரம்,  வெறுப்பு

கருணை, சாந்தம், வியப்பு

நவரசமும் நம் முன்னே நடனத்தால் காட்டுகின்றாள்

அத்தோடு விட்டாளா சட்டென்று உடை மாற்றி

பதத்தில் பாட்டுகேற்ற பாவம் பரிவு, பாசம், பக்தி, பரவசம்,

நயம் நளினம் நாணம் நம் நாட்டு நாகரீகம்

தில்லானவில் வேகம் விறுவிறுப்பு

ஆர்த்தியா இவளென்று அத்தைக்காரி கண்கலங்க

ஆமாமாம் அவளேதான் ஆரஞ்சு ஜூசுக்கு அழுதுஅடம்பிடிக்கும்

ஆர்த்திதான் இவளென்றேன், சின்ட்ரெல்லா டிரஸ் கேட்டு தினம் தினம்

சிணுங்கி நிற்கும் சிங்காரி இவள்தான் என்றேன். உன் சிகை தொட்டு

முத்தமிட்டு ‘Listen to me Athai’ சொல்லும் மினுக்கி இவள்தான் என்றேன்

ஆதியில் தொடங்கி ஆதியில் ஆடி முடித்தார்கள் ஆர்த்தியும் ப்ரீதியும்

ஆஹாஹா ஆனந்த தாண்டவம் அதி அற்புதம்

கணபதிக்கு ஒரு ஸ்துதி அவனப்பன் சிவனுக்கு ஒரு ஸ்துதி

கண்ணனையும் கிருஷ்ணனையும் கண்முன்னே நிறுத்தினார்கள்

அப்பப்பா அந்த ஐந்து மணி நேரம் ஒரு ஆனந்த வைபவம்தான்

மனசார மருமகள்களை வாழ்த்தத்தான் வாய்ப்பில்லை – அன்று

மேடைஏறி மருமகள்களை வாழ்த்தத்தான் வாய்ப்பில்லை

அரங்கேற்றம் ஒருநாள்தான் ஆர்த்தி, ப்ரீத்தி உங்களின் அரங்கேற்றம் ஒருநாள்தான் – ஆனால்

அத்தை மாமா கனவிலும் நனவிலும் காலமெல்லாம் கேட்குமடி

உங்கள் கால்சதங்கை கவிதை மொழி

அன்புடன் முருகானந்தன் – லதா – மனு – சிபி

அபியும் நானும்

அபியும்  நானும்

மனுவும்  சிபியும்  மனைவியும்  நானும்

“அபியும்  நானும் ” திரைப்படம்  பார்த்தோம் .

அப்பாவும்  பெண்ணும்  சேர்ந்து  கட்டிய  அன்புப்  பாலம்  இது .

தந்தைக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டம் இது

இனிய உறவுகளையும் இளகிய உள்ளங்களையும் பற்றிய கதை இது

மொத்தத்தில் …கோடம்பாக்கத்து  சேற்றில்

எப்போதாவது பூக்கும் செந்தாமரைகளில் இப்படமும் ஒன்று

எங்கிருந்தோ  வந்த  பிரகாஷ்ராஜ்  நடிப்புக்கு  மொழியும்  மாநிலமும்

தடையில்லை என்று மறுபடியும் நிரூபித்திருக்கிறார் ஐஸ்வர்யா

(நடிகை  லக்ஷ்மியின்  மகள் ) என்னும்  தகரத்தை  தட்டி எடுத்து

தன்  ரசவாதத்தால் தங்கமாக்கி  இருக்கிறார்  டைரக்டர்  ராதாமோகன்

ராஜும்  ராஜும்  (பிரகாஷ்ராஜ்  – பிருத்விராஜ் ) மறுபடியும்  கைகோர்த்து

கதை  நடக்கும்  அந்த  மலைவாசஸ்தலம்  முழுவதும்  நம்மை  கைபிடித்து

அழைத்துச்  சென்றிருக்கின்றனர் .

திரிஷா  இந்த  முறை  ‘ஓடிப்போக ‘ நம்மை  அழைக்கவில்லை மாறாக

செல்ல  மகளாக  வந்து  நம்மை  கொள்ளை  கொள்ளுகிறார் . சிலசமயம்

மகள் கொஞ்சம் சுய நலக்காரியோ என நம்மை சந்தேகிக்க வைக்கிறார்

திரிஷா  கொஞ்சம்  ஒட்டாமல்  தள்ளி  நிற்பது  போல்  உணர்கிறோம் .

மகள் வளரும் வேகத்துக்கு தந்தை பக்குவம் அடைவதில்லை என்பதை

கதையாக  சொல்ல  ஆரம்பித்து  கவிதையாக  முடித்திருக்கிறார்கள்

படம்  முழுவதும் பிரகாஷ்ராஜின் நகைச்சுவை  இழையோடும்

நடிப்பின்  ஆக்கிரமிப்பை  காண்கிறோம் .

கத்தி இல்லை ரத்தம் இல்லை குத்தும் இல்லை கொலையும் இல்லை

ஜாதி  இல்லை மதம் இல்லை அரிவாள் இல்லை அடியாள் இல்லை

ஆனால் அன்பு  மனங்களின்  ஆரவாரமில்லாத  உணர்ச்சிப்

பிரவாகங்கள் நம்மை கண்கலங்க  வைக்கின்றன .

பாடல்களின் சில வரிகள் நம் அடிவயிறை அழுத்தி பிசைகின்றன .

மகள் வளர வளர தன் உரிமைகளை தானே நிலை நாட்டுகிறாள்

அல்லது  உரிமையுடன் தந்தையிடமே  கேட்டு  வாங்குகிறாள் .

ஒரு  வட்டம்  விரிய  விரிய  மற்றொரு  வட்டம்  சுருங்குகிறது .

பிச்சைகாரனை கூட்டி வந்து அப்பாவிடம் அடைக்கலம் கேட்கும்

காட்சி, பள்ளி  சென்று  வர  சைக்கிள்  கேட்டு  போராடும்  காட்சி,

டெல்லி  போக  வாதிடும்  இடம், வெகு  சுலபமாக  தன  காதலை

அப்பாவிடம்  சொல்லுமிடம் . இப்படி  ஒவ்வொரு  சந்தர்ப்பத்திலும்

அப்பா  பூமி  தன  காலின்  கீழிருந்து நழுவுவது  போல்

உணர்வதை  நன்றாக  நடித்துக்  காட்டியிருக்கிறார் .

கால் கொலுசு சிலுசிலுக்க, பட்டு பாவாடை சரசரக்க, என்  வீட்டில்

2,3 மகள்களாவது வலம்  வரவேண்டும் என்று கட்டியவளிடமும்

கடவுளிடமும்  சண்டை  போட்டிருக்கிறேன் பெற்ற  மகள்  கூட்டு

புழுவாக கூடவே இருக்க மாட்டாள், பட்டாம்பூச்சியாக சிறகடித்து

புகுந்த வீட்டுக்கு பறந்து விடுவாள் என்ற நிதர்சனமான உண்மையை

தாங்கிக்கொள்ள  முடியாத  தகப்பன்களுக்க்காகவே இப்படம்

எடுத்தது போல் இருக்கிறது. அதனால்தானோ என்னவோ எல்லாம்

அறிந்த இறைவன் எனக்கு பெண்களை கொடுக்கவில்லை போலும்

நீங்கள்  அனைவரும்  கட்டாயம்  பார்க்க  வேண்டிய  படம் .

அன்புடன்

ஆனந்த்  (முருகானந்தன் )

17.03.2009