Coconut Shrimps

Simple Shrimps Version 2

இலகுவான இறால்

இறால் – அரைக்கிலோ
உப்பு, வேதாஸ் மீன் மசாலா, மஞ்சள் பொடி, எலுமிச்சை ரசம், வறுத்த, காய்ந்த தேங்காய்த் துருவல், முட்டை, தேங்காய் எண்ணெய் – உங்கள் விருப்பம்
 
செய்முறை >>>
ஓடோட வாங்கி வந்த இறாலை,
ஒவ்வொன்னா உடச்செடுத்து,
வால் நீக்கி, அழுக்கெடுத்து,
புளிப்புக்கு எலுமிச்சை
ஒரப்புக்கு மீன் மசாலா,
உப்பு, மஞ்சள் உடன் சேர்த்து,
மணி நேரம் ஊற வச்சு,
ஒரு முட்டை அடிச்செடுத்து,
ஒவ்வொன்னா உள்ள முக்கி,
தேங்காயில் புரட்டிக்கிட்டு,
எண்ணெயிலே வறுத்தெடுத்தேன்,
V
V
V
இரு மகன்கள் உண்ட பின்பு,
எனக்கு ஒன்னும் மிஞ்சலியே, 😦
Advertisements

Bedouin Barbecue (Zarb)

குழியில் சுட்ட கறி

தேவையான பொருட்கள்:

கால் ஆடு ( ஆட்டுக்கால் இல்லை, கால் ஆடு, மனசு / காசு இருந்தால் அரை அல்லது முழு ஆடு)
எலுமிச்சை – 3
பூண்டு – 20 பல் (விருப்பமிருந்தால், கிடைத்தால் மட்டும்)
கல் உப்பு – தேவைக்கேற்ப
கடப்பாரை, மண்வெட்டி, சாக்கு ,வெள்ளைத்துணி, தண்ணி, விறகு, அடுப்புக்கரி, ஜிம் பாடி நண்பர் / நண்பி / உறவினர் இருவர்

செய்முறை:

வந்துட்டார்யா, திண்டுக்கல்காரரு,  எப்பப்பார்த்தாலும் “அடுப்பப் பத்த வை, சட்டிய மேல வை, வெங்காயத்த வெட்டிப்போடு, வெள்ளைப்பூண்ட தட்டிப்போடு”-ன்னு எழுதி ஒரே போர் என்று புலம்புவர்களுக்காகவே இந்த உணவு முறை. “பெடூயின்” பழங்குடிகளின் உணவுகளில் ஒன்று.   இந்த சமையலை நான் கண்டு, கலந்து கொண்டு, முதலில் பயந்து, பின் ரசித்து உண்டது ரியாத், சவூதி அரேபியாவில் 1984 முதல் 86 வரை (படம் 1).  கடைசியாக ஜெர்மனியில் 89-இல் ஒருமுறை (படம் 2). அப்புறம் என்னாச்சின்னு கேக்குறீங்களா? கல்யாணம் ஆச்சு, அத்தோட, இந்த மாதிரி ஆதிவாசி உணவு முறைக்கு பெரிய முற்றுப்புள்ளி வச்சுட்டாங்க வீட்டுக்காரம்மா 😦 . இப்ப செல்வன் கொடுக்கும் தைரியத்தில் கோடையில் மறுபடியும் குழி தோண்டி சமைக்கப்போறேன்.

வீட்டுக்கு முன்னே, பின்னே இடம் இருப்பவர்களுக்கான சமையல் முறை இது. தோட்டம், காடு, கரம்பு, வயல், பண்ணை இருந்தாலும் சரிதான். அப்ப, அடுக்கு மாடி வீடுகளில் வசிக்கும் மத்தவங்க என்னா செய்யறதுன்னு கேக்குறீங்களா? கல்யாண வயசுலே பொண்ணு, பையன் இருந்தால் அவங்க கூட சம்பந்தம் பண்ணிக்கோங்க, இல்லையா, அவங்களோட “நண்பன்டா” அளவுக்கு ஆயிருங்க 😉

ஓகே, ரெடியா?

This method has many variations perfected over years by several countries and cultures, starting from the primitive Bedouin method to most advanced present day backyard cooking using modern equipment and tools.

பக்கத்துலே கோனார் “கிடை” போட்டிருந்தார்னா, வெள்ளாட்டுக்குட்டி ஒன்னு வாங்கி (வாங்கிட்டு வாங்க, தூக்கிட்டு வரச்சொல்லலே), களத்தூர் கபூர் பாய் அல்லது பேகம்பூர் பஷீர் பாய வரச்சொல்லி “பிஸ்மில்லாஹ்” சொல்லி அறுத்து வாங்கி, கொம்பு, குளம்பு, தோலு, வாலு வுட்டுட்டு, பெரிய பெரிய துண்டா போட்டு, நிறைய உப்பு, எலுமிச்சைச்சாறு தடவி, அங்கங்கே கீறி, தட்டிய பூண்ட உள்ளே சொருகி ஊறவையுங்க.
வடிஞ்ச ரத்தத்தை வாளிலே புடிச்சு நம்ம சுஜாதா, தேன்மொழி தங்கசிகிட்டே கொடுத்தீங்கன்னா கார சாரம பொரிச்சு கொடுத்துருவாங்க.
நம்ம ஜிம்பாடி நண்பர்களை அனுப்பி, வீட்டுக்கு வெளியே இரண்டு அடிக்கு இரண்டு அடி அளவில், மூன்று அடி ஆழத்தில் குழி தோண்டி, மண் சரியாமல் களிமண் அல்லது தீச்செங்கல் (Refractory bricks) வைத்து பூசி, காய்ந்தவுடன், விறகு அல்லது கரி போட்டு எரித்து கண கணவென்று கங்கு (தணல்) வர வைத்துக்கொள்ளுங்கள்.
ஈரச்சாக்கின் மீது வெள்ளைத்துணி விரித்து, பெரிய பெரிய கறித்துண்டுகளை வைத்து மூடி (இங்கதான் ஒரு டுவிஸ்ட் – சோறு சாப்பிடுறவங்களும் விருந்துக்கு வருவாங்கதானே, அதுனாலே கறி, ஊறவச்ச அரிசி, உலர் திராட்சை, வறுத்த முந்திரி, பாதாம், பிஸ்தா, காய்ஞ்ச எலுமிச்சை, குங்குமப்பூ கரைச்ச தண்ணி, மறுபடியும் கறி; அடுக்கு பிரியாணி மாதிரி அடுக்குங்க), குழிக்குள் தணலின் மேல் இறக்குங்க. (செங்கல் வைத்து கட்டிய குழி இருந்தால் முழு ஆட்டை நாலா வகுந்து கொக்கியில் மாட்டி தொங்கவிட்டு சுட்டு எடுத்தால் இன்னும் சுவை).
குழியை தகரம், இரும்பு, அலுமினியம் மூடி இருந்தால் மூடலாம், மேலே மறுபடியும் தம்முக்கு தணல் போடலாம். மணல் போட்டு மூடுங்க. தண்ணீரை தெளிச்சு விடுங்க. ரெண்டு, மூணு மணி நேரம் ஆகுங்க. அதுவரை விருந்துக்கு வந்த அண்ணன், தம்பி, மாமன், மச்சான், மதினி, கொழுந்தியா எல்லோருடனும் ஜாலியா அரட்டை அடிங்க. (வரதட்சணை பாக்கி பத்தி பேசி சண்டை இழுத்துறாதீங்க.)

சுடுமனலை தள்ளிட்டு, கை காலை சுட்டுக்காம, மூட்டைய வெளிய எடுத்து, சாக்கை திறந்து, பிறகு வெள்ளைத்துணியை பிரிச்சு பாருங்க. வாசம் பக்கத்துக்கு ஊரைக்கூட்டும். அப்புறமென்ன, கறித்துண்டுகளை நாம சாப்டுவோம், சோறை சொந்தகாரங்களுக்கு போடுவோம்.

பிரிஞ்ச சொந்தம், நட்பு மறுபடியும் சேருங்க, என்னா நான் சொல்றது சரிதானே?
lamb-riyadh-19831989 Syed Laqta Germany

Shredded Paneer

இன்று என்ன சமையல்?

பனீர் கொத்து (Shredded Paneer)
#மரக்கறி #Veg #பனீர்

தேவையான பொருட்கள்:
பனீர் – 300 கிராம்
1. வேதாஸ் டிக்கா மசாலா – 2 மேசைக்கரண்டி
2. மஞ்சத்தூள் – 1/2 தேக்கரண்டி
3. உப்பு – தேவைக்கேற்ப
4. எலுமிச்சை ரசம் – 1/2 தேக்கரண்டி
5. பெரிய வெங்காயம் – 2
6. பச்சை மிளகாய் – 1
7. கருவேப்பிலை – கொஞ்சம்
8. கடுகு – கொஞ்சம்
9. பச்சைக்குடை மிளகாய் – கொஞ்சம்
10. சிகப்புக்குடை மிளகாய் – கொஞ்சம்
11. தக்காளி – 3 கீத்து
12. தேங்காய் எண்ணெய் – 4 மேசைக்கரண்டி

செய்முறை:
நன்றாக உதிர்த்து விட்ட பனீருடன் 1 – 4 வரை சொல்லியுள்ள பொருட்களை, நன்றாக கலந்து ஒரு அரை மணிநேரம் ஓரத்தில் வைத்தேன்.
தேங்காய் எண்ணையை காயவச்சு கடுகு, கருவேப்பிலை தாளிச்சு, வெங்காயம், ப.மிளகாய் வதக்கி, புரட்டி வச்ச பனீரை நடுவுல கொட்டி, ஒரு ரெண்டு நிமிஷம் புரட்டி (ரொம்ப நேரம் சமைச்சா, ரப்பர் மாதிரி ஆயிரும்) அழகுக்கு குடை மிளகாய் தூவி, புதுசா வாங்குன தட்டுலே, ரெண்டா பிரிச்சு கொட்டி, தக்காளி கீத்தை உப்பு போட்டு சுத்தி வச்சு, சுடு தண்ணி குடிச்சிகிட்டே சாப்பிட்டேன் பாருங்க,,,அப்படி ஒரு ஆனந்தம்…

பின் குறிப்பு: எப்பப் பாரு ஒரே தட்ட போட்டோ எடுத்து போடறேன்னு நீங்க எல்லோரும் திட்டுறீங்கன்னு பொண்டாட்டி கிட்டே சொல்லி, கொற அழுகை அழுது, உண்ணாவிரதம் இருப்பேன் என்று பயமுறுத்தி, புது தட்டு வாங்கிட்டேங்க 🙂IMG_20170428_122107

Pan fried Paneer with Mushroom

இன்று என்ன சமையல்?

வட்ட வட்ட பனீர், வதக்கிய காளான்

தேவையான பொருட்கள்: பனீர் 200 கிராம்,
காளான் 100 கிராம்
வேதா டிக்கா மசாலா 1/2 தேக்கரண்டி
எலுமிச்சை ரசம் கொஞ்சம்
உப்பு தேவைக்கேற்ப
தேங்காய் எண்ணெய் 2 மேசைக்கரண்டி

செய்முறை: மின்னல் வேகத்தில் தயாரான மதிய உணவு. வேதா டிக்கா மசாலா, எலுமிச்சை ரசம், உப்பு கலந்து
வட்ட வட்டமாக வெட்டிய பனீர் மேல் தூவி, பத்து நிமிஷம் ஊறவச்சு, எண்ணெயை காயவச்சு, ரெண்டு பக்கமும் பொரட்டி போட்டு பொரிச்சு எடுத்தேன்.
சட்டி சூடா இருக்கும்போதே, ஒரு நாலு காளான பாதி பாதியா வெட்டி உள்ளே போட்டு, சும்மா ரெண்டு கிண்டு கிண்டி எடுத்துட்டேன்.
சமையல் நல்லா இருக்கோ இல்லையோ, போட்டோ பேஸ்புக்கில் போடணுமே, அதுக்காக அழகா அடுக்கி, பதிவு பண்ணுகிறேன், சரிங்களா?
யார் யாருக்கோ ஒட்டு போடுறீங்க, எனக்கும் ஒரு லைக் போடுங்க..(போடலேனா, நான் சாப்பிட மாட்டேன், அம்மா, அப்பா இல்லாத பிள்ளையை பட்டினி போட்ட பாவம் உங்களுக்கு வேணுமா?)

பின்கதை: என்னாச்சுன்னா, வீட்டுக்காரம்மா காலைலெ கீழே வந்தாங்க. Good Morning Honey, I love youன்னு சொன்னேன்.
அழகான புருவத்தை மேலே உசத்தி, (அதான் மாசா மாசம், eyebrow பண்றீங்களே? அப்புறம் ஏன் புருவம் நல்லாஇருக்காது?)
“என்னா வேணும்” ன்னு கேட்டாங்க. பால்லே இருந்து பனீர் செய்வியே, அது செஞ்சு தர்ரியா-ன்னு கேட்டேங்க.
“எலி ஏன் அம்மணமா ஓடுதுன்னு” இப்பத்தானே புரியுது, honeyன்னு சொல்லேலேயே நினைச்சேன், ஏன், உங்க  FaceBook IMG_20170407_090537IMG_20170407_115135IMG_20170407_115159groupலே, உங்க தங்கச்சிக யாரும் பனீர் எப்படி செய்வதுன்னு போடலியா – அதைப் பாத்து செய்யுங்க-ன்டு காரை எடுத்துட்டு கிளம்பி போய்ட்டா.
“கடன் பட்டார் நெஞ்சம்போல்” ஒரு நிமிஷம் கலங்கி நின்னேங்க. மாடோட மடிலேருந்து directஆ பனீர் எடுக்கிற மிசின் கண்டு பிடிக்கிறேன்-னு டேபிளில் மூணு தடவை அடிச்சு
சத்தியம் பண்ணிட்டு, கோட்டும், குல்லாயும் போட்டுக்கிட்டு, குளிரைத் தாங்கிக்கிட்டு, (3 degree C)
பொடி நடையா நடந்துபோய், Naanak Paneer வாங்கிட்டு வந்தேங்க. வீட்டுக்கு வந்துட்டு labelஐ பாத்தா,
ஷாக் ஆயிட்டேங்க. Ingredients Listலே Xanthum Gum, Guar Gum, Potato Starch-னு போட்டுஇருந்துச்சுங்கோ .
ஹா, ஹா, அதான் செல்வன் அண்ணாச்சி அடிக்கடி processed food வாங்கதீங்கன்னு சொல்றாரோன்னு நினைச்சேங்க.
நேரம் ஆச்சு, பசி வேற, ஒரு நாள்தானே, லேபில தூக்கிப் போட்டுட்டு சமைச்சு சாபிட்டுடேங்க.
இந்த விஷயம் நமக்குள்ளே இருக்கட்டுங்க. நம்ம அட்மின்ஸ், சீனியர்களுக்கு தெரியவேண்டாங்க…
மறுபடியும் சந்திப்போம், விரைவில்…

Pan fried okra (ladies finger)

வதக்கிய வெண்டைக்காய்
#Veg #Okra

தேவை >>> பிஞ்சு வெண்டிக்காய் கால் கிலோ,
பேலியோ மசாலா ஒரு தேக்கரண்டி,
உப்பு கொஞ்சம்,
எலுமிச்சை ரசம் கொஞ்சம்,
துருவிய தேங்காய் – ரெண்டு மேசைக்கரண்டி
தேங்காய் எண்ணெய் நான்கு மேசைக்கரண்டி.

செய்முறை >>> ரொம்ப சுலபம். நீளமா வெட்டிய வெண்டியை பேலியோ மசாலா, உப்பு, எலுமிச்சை ரசம்,
ஒரு மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய் கலந்து ஒரு அரைமணிநேரம் ஊறவச்சேங்க.
நாலுலே ஒண்ணு போச்சுன்னா எவ்ளோ? மீதி மூணு மேசைக்கரண்டி எண்ணையை, காய வச்ச
வடச்சட்டியில விட்டு, ஊறவச்ச வெண்டிக்காய உள்ளே போட்டு, மிதமான நெருப்பில், மூடி போட்டு வேக வச்சேங்க.
அடிபிடிக்க விட்றாதீங்க. கொஞ்ச நேரம் பேஸ்புக் பாக்காட்டி, சுத்துற உலகம் நிக்கவா போகுது…
துருவிய தேங்காய் போட்டு இறக்குங்க.

முடிவுரை >>> அப்புறம் என்ன, ஏழு முறை தீயை வலம் வந்து பண்ணிய சத்தியத்தை காப்பாத்த, பெரிய மனசு பண்ணி, பெருந்தன்மையோட, கட்டிய பொண்டாட்டிக்கு
கொஞ்சூண்டு கொடுத்துட்டு மீதிய நான் சாப்டேங்க.

சண்டைக்கத்தி பிடிக்க வேண்டிய கையில் சமையல் கத்தி பிடிக்க வைத்த விதியை வைவதா? வாழ்த்துவதா?IMG_20170403_122809

Baked Salmon

மின்னடுப்பில் சுட்ட மீன் (Baked Salmon)

தேவையான பொருட்கள் : சால்மன் மீன் – 600 கிராம்
மிளகுத்தூள் கொஞ்சம்
மஞ்சத்தூள் கொஞ்சம்
உப்பு கொஞ்சம்
சீமைத்துளசி கொஞ்சம்

செய்முறை: ஒரு 11 மணிக்கு, கழுத்தில் துண்டைக்(Apron) கட்டிக்கிட்டு , கையில் கத்தியை எடுத்தேன்.
புயல் வேகத்தில் கயல்விழியாள் வந்தாள். ஒரு முறை முறைத்து “என்னா சமைக்கப்போறீங்க?” என்றாள்.
மீன் என்று முனகினேன்.
இன்னும் பெரிய கத்தியை கையில் எடுத்துக்கொண்டு “போ, போ, பனிரெண்டு மணிக்கு சாப்பாடு வரும்” என்று மிரட்டினாள்.
நான் “எதாவது உதவி” என்று பணிவாக கேட்டேன்.
“வெளிலே மூணு அடிக்கு ஸ்னோ கொட்டிக்கிடக்கு” போய் கிளீன் பண்ணுங்க என்றாள்.
நம்மால் எதற்கு மூன்றாம் உலகப்போர் என்ற நல்லெண்ணத்தில் கத்தியை கீழே வைத்துவிட்டு பின்வாங்கினேன்.
நான் திரும்பி வருவதற்குள் மதிய உணவு தயார். மீனை மேலே சொன்ன பொருட்களுடன் ஊறவைத்து, அவனில் (Electric Convection Oven) 375 degree Fல்
1/2 மணி நேரம் bake செய்து எடுத்து, அவுச்ச (broccoli) புரோகலியுடன் அனுபவிச்சு சாப்பிட்டேன்.

IMG_20170316_122717

Mutton Chops – Madurai Style

நேற்று இரவு என்ன உணவு?
மதுரை மட்டன் சாப்ஸ்
என்னென்ன வேண்டும்?
சமைக்க – சாப்ஸ் – 3/4 கிலோ
வறுக்க – நல்லெண்ணெய் – 4 மேசைக்கரண்டி
                    பொடியா நறுக்கிய சிவப்பு வெங்காயம் – 2
ஊறப்போட – தயிர் – 3 மேசைக்கரண்டி
                             மஞ்சப்பொடி – 1/2 தேக்கரண்டி
                             மிளகாய்ப்பொடி – 1 தேக்கரண்டி
                             ஏலம், பட்டை, கிராம்பு பொடி – 1/2 தேக்கரண்டி
                             உப்பு – 2 தேக்கரண்டி
                             எலுமிச்சைச்சாறு – 2 தேக்கரண்டி
மேலே தூவ – மிளகு – 1/2 தேக்கரண்டி
                            சோம்பு – 1/2 தேக்கரண்டி
எங்கே வாங்கினேன்?
சுல்தான் சூப்பர் மார்க்கெட், ஆட்டவா, கனடா
சாப்ஸ் விலை எவ்வளவு?
CAD$22 (INR 1130/=) Was it worth? YES, every cent. Meat was fresh and tender and my sons loved it.
The Labenese butcher was the funniest butcher I have ever met.
செய்முறை யாரோடது?
கூட்டு முயற்சி – “பெத்தவ நானு, என் மகனுகளுக்கு எப்படி பிடிக்கும்னு எனக்குத் தெரியாதா?” என்று அவள் சொல்ல,
“சாப்பிடுவதற்கே உயிர் வாழும் எனக்குத் தெரியாதா?” என்று நான் சொல்ல……அரை மணிநேரம் சண்டை போட்டு, சமாதானம் ஆகி
சமரசமா போயி, பிறகு அவள் சொல்லச்சொல்ல, நான் சமைத்தேன். (ஆண்களுக்கு ஒரு சின்ன அறிவுரை – திருநெல்வேலி மாவட்டத்தில்
பொண்ணு எடுக்காதீங்க, ரொம்ப மிரட்டுறாங்க). நம்ம, கதையை எப்படி ஆரம்பிச்சு, எங்கிட்டு கொண்டு போனாலும், முடிவு “அவுங்க” கைலேதானே !
சரி, வாங்க சமைப்போம் – ஒரு மணி நேரத்தில் உணவாகப் போகும், தோள் பகுதி துண்டுகளை, அன்போட, கொஞ்சம் உப்பு, மஞ்சப்பொடி போட்டு நல்லா கழுவிக்கோங்க.
ஏலம், பட்டை, கிராம்பு வறுத்து, அரை அல்லது முக்கால் தேக்கரண்டி வருமளவு பொடிச்சு, மேலே “ஊறப்போட” பகுதியில் சொல்லியுள்ள பொருட்களுடன் சேர்த்து, மட்டனை நன்றாக “மேரிநேட்” செய்யுங்க. (I left it for 2 hours).
பிறகு கொஞ்சமா தண்ணி ஊத்தி, குக்கரில் 2, 3 விசில் வரும் வரை வேக வைத்து, ஆற விட்டு, வடச்சட்டியில் எண்ணெய் விட்டு, காயவிட்டு, சிவப்பு வெங்காயத்தை மேலும் சிவக்கவிட்டு img_20170206_183247img_20170206_183553mutton-chops-7-2-2017சாப்ஸ் துண்டுகளை அலுங்காமல் பரப்பி, குறை தீயில், தண்ணி சுண்டும்வரை வறுத்து (புரட்டி போட மறக்காதீங்க), புதுசா வறுத்து அரைச்ச சோம்பு, மிளகுப் பொடி தூவி, இறக்கி வைங்க…இதுவரை பேசாத உங்க
பக்கத்து வீட்டு பங்கஜம் அக்கா, தேடி வந்து உங்ககிட்டே பேசிட்டு போவாங்க…:-)
அப்புறம் என்ன, கறி சாப்பிடாத “அம்மாவை” , பக்கத்துலே உட்காரவச்சு, பாக்கவச்சுகிட்டே பகாசுரர்கள் மூணு பேரும் முக்கால் கிலோ கறியை பங்கு போட்டு சாப்பிட்டோம்.

Tuna Stirfry

மீன் கொத்து

தேவையான பொருட்கள் >
முள்ளில்லா சூரை மீன் (Tuna) – 500 கிராம்
முட்டை – 3
தாளிக்க – சோம்பு- 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
சுவைக்கு – வெங்காயம் – 6
உப்பு – 3 தேக்கரண்டி
காரத்துக்கு – மிளகாய்ப்பொடி – 2 தேக்கரண்டி
கலருக்கு (நலனுக்கும்) – மஞ்சள் பொடி – 1 தேக்கரண்டி
அலங்கரிக்க – கொத்தமல்லி – ஒரு கட்டு
மிளகுப்பொடி – 1/2 தேக்கரண்டி
இறுதியாக – எலுமிச்சை சாறு

செய்முறை >
சரசு: லச்சுமியக்கா, லச்சுமியக்கா,
லட்சுமி: என்னா சரசு, இந்த நேரத்துல?
சரசு: என் கஷ்டத்த வேற யாருகிட்ட சொல்வேன்க்கா
லட்சுமி: அப்படி என்ன கஷ்டம், உட்காரு, சூடா சுக்குத்தண்ணி போடுறேன், குடிச்சிகிட்டே பேசுவோம், ம்ம், சொல்லு,
சரசு: (குரலைத் தாழ்த்தி) எம் புருஷன் போற போக்கு சரியில்லேக்கா. பத்து நாளைக்கு முன்னாடி, மருதைக்கு ஏதோ கூட்டம்ன்னுட்டு போனாருக்கா..
வந்ததுலேருந்து ஒழுங்காவே சாப்பிட மாட்டேன்கிறார்க்கா. நானும் பிள்ளைகளும் ரேஷன் அரிசி சாப்பிட்டுட்டு, அவருக்கு சம்பா அரிசிலேதான் சமைக்கிறேங்க்கா.
வெறுஞ்சோறக் கூட தட்டு தட்டா வெட்டுற மனுஷன், சோற வுட்டுட்டு, வெஞ்சனத்த மட்டும் தின்னுட்டு போயிறார்க்கா.
லட்சுமி: நீ ஏன்னு கேட்டியா?
சரசு: கேட்டேனே – பேலியோ, போலியோன்னு உளர்றார்க்கா..வாயிலே வராத வார்த்தையா சொல்றார்க்கா. வேற எங்கேயும் கை நனைக்கிறாரோன்னு பயமாயிருக்குக்கா
லட்சுமி: சே, சே, உம்புருஷன் நல்லவேம்மா… அப்படியெல்லாம் போகமாட்டான், சரசு…
சரசு: நைட் ஷிப்ட் முடிஞ்சு வரலே, அந்த ஒத்த புளியமரத்துக்கு கீழே காத்து, கருப்பு அடிச்சிருக்குமாக்கா
லட்சுமி: (சிரித்துக்கொண்டே) ஓம்புருஷன்தான் காத்து, கருப்ப அடிச்சிட்டாருன்னுதான் பேப்பர்லே படிச்சேன் !
சரசு: போங்கக்கா, உங்களுக்கு கிண்டல் பண்றதுதான் வேல, மல்லிகைப்பூ மாதிரி இட்லி அவிச்சாலும், நாலு முட்டைய கொடுன்னு, வாங்கி சாப்பிட்டுட்டு போறாரு..
நெய்யும் முந்திரியும் மிதக்க நான் செஞ்ச பொங்கல, மக ஊட்டினதாலே, ஒரு வாய் சாப்பிட்டார்க்கா.
பொங்கல் பானைலெ சுத்தி வச்ச மஞ்ச கிழங்க உருவி, பச்சையா மென்னு முழுங்கினார்க்கா.
நம்ம கோடி வீட்டு ஜோஸ்யர் கிட்டே கேட்டேன்க்கா, இன்னும் 7 1/2 வருஷத்துக்கு இப்படித்தான் இருக்கும்ன்னு சொல்லிட்டார்க்கா.
என்ன சமைக்கிறதுன்னே தெரிலே, எதாவது புதுசா சொல்லுங்க்கா
லட்சுமி: சொல்லிருவோம்…நீ நம்ம (மஸ்தான்)பாய் கடைலே கூப்பிட்டு அரைக்கிலோ சூரை மீனு, சுத்தமா, முள், எலும்பு, தோல், எதுவும் இல்லாம, வீட்டுக்கு அனுப்ப சொல்லீரு.
வீட்டுக்கு வந்தமீனை, உப்பு, மஞ்சள் நீ போட்டு, வேக வச்சு , ஆறவச்சு, புட்டு, புட்டு, எடுத்து வையி.
கொஞ்சம் பெரிய வடச்சட்டிய அடுப்புல வச்சு, நாலு கரண்டி நல்லெண்ணெ நல்லா சூடுபண்ணி,
சோம்பு, சீரகம் போட்டு பொரிஞ்சதுமே, வெட்டிவச்ச வெங்கயத்த கொட்டிநல்லா வதக்கிக்கிட்டு,
சரசு: அக்கா, அக்கா, கொஞ்சம் மெதுவா சொல்லுங்கக்கா
லட்சுமி: சரிஈஈஈ….உப்பு கொஞ்சம் கூடப் போட்டு, பிச்சு வச்ச மீனப்போட்டு
காரத்துக்கு மிளகாய்ப்பொடி, கலருக்கு மஞ்சப்பொடி, போட்டு நல்லா கிண்டி விட்டு,
நாட்டுக்கோழி முட்டைமூண, நடுவிலதான் உடைச்சு ஊத்தி, வேகும் வரை கொத்தி விட்டு,
கொத்தமல்லி மேலே போட்டு, இறக்கி கீழே வச்சு, எலுமிச்சை சாறு ஊத்தி,
மிளகை மேலே தூவி, மணக்கும் மீன் கொத்தை, உன் மாமனுக்கு பரிமாறு, பாதிய நீ தின்னு.
சரசு: (அதிர்ச்சியில்) அக்கா, அப்ப சோறு…
லட்சுமி: சோறு இல்லே, கருவேப்பிலை கிள்ளிப்போட்டு, சொம்பு நிறைய (நீர்)மோரக்கொடு.
சரசு: அக்கா, என்ன, நீங்களும் அவுக மாதிரியே அரிசி, பருப்பு ஒதுக்குறீக !
லட்சுமி: அதுவா, எம்புருஷனும் ஏழாம் தேதி, மதுரைக்கு அதே கூட்டத்துக்கு போய்வந்தாங்க. அப்ப இருந்து, நாங்களும் இட்லி, தோசை, வடை, பூரி, ரொட்டி, சப்பாத்தி
எல்லாம் விட்டுட்டோம்.
சரசு: சரிக்கா, நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும், மீன் வந்திருக்கும், நான் கிளம்புறேன்…நாளைக்கு பேசுவோம்..

1484795118419

dsc04193

Paneer Cutlet

பனீர் காய்கறி கட்லெட்
#வெஜ், #Veg

தேவையான பொருட்கள் ===>
துருவிய காய்கறிகள் (கேரட், சிவப்பு முள்ளங்கி, ஜுக்கினி ) – 150 கிராம்
வெட்டிய காய்கறிகள் (பச்சை மிளகாய் 2, காளான் 1, வெங்காயத்தாள் 2, கீரை கொஞ்சம், கொத்தமல்லி கொஞ்சம்)
பனீர் – 200 கிராம்
முட்டை 1
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை ===>
மேலே சொல்லிய காய்கறிகளை வேகும் வரை உப்பு போட்டு வதக்கி எடுத்துக்கோங்க.
துருவிய பனீருடன், வதக்கிய காய்கறிகளைப் போட்டு, முட்டையை நன்றாக அடிச்சு கலந்து,
உருட்டி, வடைகளாகத் தட்டிக்கோங்கோ.
சட்டியில் கொஞ்சமா ஆலிவ் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஊத்தி, மிதமான சூட்டில்
கட்லெட்களை சுட்டு, திருப்பி போட்டு, மறுபடியும் சுட்டு எடுங்கள்.

பின் குறிப்பு ===>
முட்டை இல்லாமலும் செய்யலாம். கொஞ்சம் உடையாமல் பார்த்துக்கோங்க.
முட்டை சேர்த்தால் எண்ணெய் குடிக்காது, கட்லெட் நன்றாக உப்பி, மெதுவாக இருக்கும்.
வீட்டில் உங்கள் மதிப்பு கொஞ்சம் கூடும். மறந்து போன காதல் மறுபடியும் நினைவுக்கு வரும்.

img_20170119_175302

img_20170119_181944

img_20170119_183708

Dindigul – Shallots Connection

திண்டுகல்லும் வெங்காயமும் – பின்னணி

தொலைபேசி எண்கள் ஒற்றை இலக்கங்களாக இருந்த காலம். PNG தரகு மண்டியின் எண் – 7. போனில் சுழற்றும் டயல் இருக்காது. போனை எடுத்தால், Exchange-உடன் connect ஆகும்.
தாடிகொம்பு ரோடு, பழனி ரோடு, பென்சனர் தெரு, சொசைட்டி தெரு மற்றும் சுற்றியுள்ள தெருக்களில் தரகுமண்டிகள் ஏராளம்.
பாதுகாப்பிற்காக கட்டப்பட்ட பேட்டைகளும் உண்டு – நாயக்கர் பேட்டை, நாடார் பேட்டை, புதுப்பேட்டை.
மிக அதிகமாக வாங்கி, விற்க பட்ட பொருள் – சின்ன வெங்காயம். தமிழ்நாட்டிலேயே, ஏன், தென்னிந்தியாவிலேயே மிகபெரிய (சின்ன)வெங்காய சந்தை திண்டுக்கல்தான்.
வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியும் நடக்கும். ஆந்திராவில் இருந்து வெங்காயம் வாங்க வரும் முதலாளிகளின் ஆகிருதி கண்டு மலைப்பதுண்டு.
சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வண்டி வண்டியாக சாக்குகளில் வெங்காயம் வந்து இறங்கும். மூட்டை சுமப்பவர்கள் இடுப்பில் கொக்கி சொருகி வைத்திருப்பார்கள்.
ஒரு கொத்து கொத்தி, லாகவத்துடன் மூட்டைகளை முதுகில் சுமந்து, இறக்கி, அம்பாரம், அம்பாரமாக குவிப்பார்கள்.
ஜிம்முக்கு போகாமலேயே பலருக்கு சிக்ஸ் பேக் வயிறு இருக்கும்.
கூலிப்பெண்கள் குப்பை அகற்றி, அழுகிய வெங்காயம் ஒதுக்கி, சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபடுவார்கள்.
சிலேடைப் பேச்சுக்கு குறைவிருக்காது. அன்று புரியவில்லை. வளர வளர புரிந்தது.
நிறையப்பேர் வெற்றிலை, புகையிலை போடுவார்கள். (அங்குவிலாஸ் புகையிலை திண்டுக்கல்லின் மற்றொரு பெரிய தொழில் நிறுவனம்).
அப்பா ஆறுமணிக்கு வாணிவிலாசில் முதல் காப்பி குடித்துவிட்டு, முதல் சுற்றில் வெங்காய வரத்து, ரகம், தரம் பார்த்து விடுவார்.
எட்டு மணியில் இருந்தே வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்து விடும். வாங்குபவர்கள் துண்டுக்குள் கை நுழைத்து, விற்பவர்களின் விரல்களைத் தொட்டு, தடவி விலை பேசுவார்கள். (Silent Auction)
திறமையுடன் அதிர்ஷ்டமும் வேண்டும். கால் ரூபாய், அரை ரூபாய் விலை வித்தியாசத்தில் கூட ஆயிரம், இரண்டா யிரம் மூட்டைகள் கிடைக்கும், கிடைக்காமலும் போகும்.
அந்த விரல் பாஷையை அப்பா சொல்லிக்கொடுக்கவேயில்லை. படித்து நல்ல வேலைக்குப்போ என்பார்.
தொழிலாளர்களை சுரண்டுவது உலகம் முழுவதும், எல்லாக் காலத்திலும் நடப்பதுதானே. திண்டுக்கல்லும் விதிவிலக்கு அல்ல.
தரகுமண்டி குமாஸ்தாக்கள் சங்கம், மூட்டை தூக்குவோர் சங்கம், வண்டிக்காரர்கள் சங்கம் தொடங்கி வளர ஆரம்பித்தன.
உரிமைகளை கேட்டு, கொடுப்பதை வாங்கிக் கொள்ளவேண்டும். பணத்தை எதிர்த்து போராடி வெற்றி கொள்ள முடியாத நேரம்.
சில நல்ல முதலாளிகளும் இருந்தார்கள். எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்து, 1500 ரூபாய் இல்லாமல் நின்றபோது
KTN தண்டபாணிப்பிள்ளையும், சௌடப்பக்கவுண்டரும் உதவினார்கள்.
அவர்களுக்கு எப்பிறப்பிலும் நன்றிக்கடன் பட்டவனானேன்.
தொழிலில் போட்டி இருக்கும். வஞ்சகம் இருந்ததாக நினைவில்லை. ஜாதி, மதப் பிரச்சினை இல்லை.

எனவே, சின்ன வெங்காயம் எங்கள் வாழ்வில் நீக்கமற நிறைந்திருக்கும். பழைய சோறும் சின்ன வெங்காயமும் பலருக்குக் காலை உணவு.
தயிர் சாதமும், உப்பு போட்டு பொடுசா நறுக்கி வதக்கிய சின்ன வெங்காயமும் பச்சைமிளகாய் வெஞ்சனம் தான் பலருக்கு மதிய உணவு.
பக்கோடாவில் சின்ன வெங்காயம், தூள் பஜ்ஜியில் சின்ன வெங்காயம், வடையில் சின்ன வெங்காயம், வடகத்திலும் சின்ன வெங்காயம்
பங்காருசாமி நாயுடு “பச்சைக் குருமா” வில் சின்ன வெங்காயம், எங்க ஊரில் எங்கும் எதிலும் சின்ன வெங்காயம்…

அம்மா அடிக்கடி செய்யும் “வெங்காயக் கறி” நட்பு, உறவு வட்டத்தில் மிகப் பிரபல்யம். அந்த கைவண்ணம் அம்மாவிடம் இருந்து இரண்டு அக்காக்களுக்கு போய், இப்ப என்னிடம் வந்திருக்கிறது.

img_20170116_132531

திண்டுக்கல் வெங்காயக் கறி
#அசைவம் #Non-Veg #Lamb

செய்முறை உபயம் – அக்கா ஜமுனா ரமனிகரன் (திண்டுக்கல்)

தேவையான பொருட்கள் :
இளம் ஆட்டுக்கறி – 1 கிலோ
சின்ன வெங்காயம் 1 கிலோ
மிளகு – 3 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
இஞ்சி – 25 கிராம்
பூண்டு – 50 கிராம்
மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி – 1/2 தேக்கரண்டி
கருவேப்பிலை – ஒரு கொத்து
நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை :
அடுப்பில் சட்டி, அதற்குள் எண்ணெய்,
காய்ந்தவுடன் கருவேப்பிலை, பொடியாக வெட்டிய சின்ன வெங்காயம் பாதி வெந்தவுடன், உப்பு, அரைத்த இஞ்சி பூண்டு சீரகம், வாசம் போகும் வரை வதக்கி, சின்ன சின்ன துண்டுகளாக வெட்டிய கறி போட்டு,
மஞ்சள், மிளகு, சீரகம் அரைத்து உள்ளே போட்டு, கொஞ்சமாய் தண்ணி ஊத்தி,
அது கொதிக்கும் இசையிலும், மிதந்து வரும் மணத்திலும், மனதைப் பறி கொடுத்து,
கறி சுருள, சுருள சுண்டும் வரை வதக்கி, துணைக்குத் தயிர் பச்சடியுடன்
மூவர் பகிர்ந்து சாப்பிட…..ஆஹா, இதுவன்றோ சொர்க்கம் என்று
நிச்சயம் எண்ண வைக்கும் எங்க ஊர் (திண்டுக்கல்) வெங்காயக்கறி.